×

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரம் மோசடி மாணவன் பெற்றோருடன் தலைமறைவு : சென்னையில் தேனி தனிப்படை போலீசார் முகாம்

சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் சென்னையை சேர்ந்த மாணவன் தனது பெற்றோருடன் தலைமறைவாகி உள்ளார். இதனால் தேனியில் இருந்து வந்த தனிப்படையினர் சென்னையில் முகாமிட்டு தேடி வருகின்றனர். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மூலம் தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சென்னையை சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவன் படித்து வந்தது தற்போது அம்பலமாகி உள்ளது. இதையடுத்து தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் போலீசில் புகார் அளித்தார். ஆள்மாறாட்டம் வெளியான தகவலை தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட மாணவன் கல்லூரிக்கு வரவில்லை. இதற்கிடையே இந்த மோசடி பின்னணியில் உள்ள குற்றவாளிகள் மற்றும் மோசடியில் ஈடுபட்ட மாணவனை பிடிக்க தேனி மாவட்ட கண்காணிப்பாளர் மேற்பார்வையில் 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவனின் தந்தை வெங்கடேசன் பிரபல தனியார் மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். இதனால் மாணவன் உதித் சூர்யா மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்த தேனியில் இருந்து 6 பேர் கொண்ட தனிப்படையினர் நேற்று மாலை சென்னை வந்தனர்.

பின்னர் தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மாணவனின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்த  சென்றனர். ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்தது. உடனே அருகில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நபர்களிடம் மாணவன் மற்றும் அவனது பெற்றோர் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது கடந்த 2 நாட்களாக வீடு பூட்டியுள்ளதாகவும், அவர்கள் எங்கே சென்று உள்ளார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை என்று தெரிவித்தனர். அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் டாக்டர் வெங்கடேசனை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் மாணவன் மற்றும் அவனது பெற்றோரது செல்போன் சிக்னல் மூலம் தேடி வருகின்றனர்.

சிபிஐக்கு மாற்ற பரிந்துரை: தேனி எஸ்பி பாஸ்கரன் கூறுகையில், ‘‘இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. எனவே வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்ற வேண்டும் என மாநில போலீஸ் நிர்வாகத்திற்கு பரிந்துரைக்க உள்ளோம்’’ என்றார்.
தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கூறுகையில், ‘‘முறையான ஆவணங்களுடன் வந்ததால் அட்மிஷன் போட்டோம். ஆள் மாறாட்டம் பற்றி தெரியவந்ததும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது அகில இந்திய அளவிலான பிரச்னை போல் தெரிகிறது. எங்கு தவறு நடந்தது, யார் குற்றவாளி என்பதை போலீசார் தான் முடிவு செய்ய வேண்டும்’’ என்றார்.

கல்லூரி உயரதிகாரிகள் ஆசியுடன் முறைகேடா?

தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒரு உயரதிகாரியும், உதித்சூர்யாவின் தந்தையும் சென்னையில் ஒரே அரசு மருத்துவமனையில் பணிபுரிந்துள்ளனர். அந்த பழக்கத்தை உதித்சூர்யாவின் தந்தை தவறாக பயன்படுத்த நினைத்துள்ளார். இங்குள்ள ஒரு உயரதிகாரியும் அதற்கு துணையாக இருந்துள்ளார். இல்லாவிட்டால் இவ்வளவு பெரிய முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை என மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் சிலரே புகார் கூறுகின்றனர். இதற்கிடையில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய போலி உதித்சூர்யாவிற்கு ஒரிஜினல் உதித்சூர்யாவின் தந்தை பேசியபடி பணம் தரவில்லை. இதனால்தான் இந்த பிரச்னை வெடித்துள்ளது எனவும் சிலர் கூறியுள்ளனர். இதற்கிடையில் முதலாம் ஆண்டு மாணவர்கள் ஒரிஜனல் உதித்சூர்யாவிடம், ‘‘நீ எந்த ஊரில் நீட் தேர்வு எழுதினாய்? எந்த மையத்தில் எழுதினாய்’’ என்பது உட்பட பல்வேறு கேள்விகள் கேட்டு நச்சரித்துள்ளனர்.

இதனால் ஒரு கட்டத்தில் டென்ஷனான ஒரிஜனல் உதித்சூர்யா, ‘‘நான் ஆள் மாறாட்டம் செய்து பணம் கொடுத்துதான் மருத்துவக்கல்லுாரியில் சேர்ந்தேன். உங்களால் என்ன முடியுமோ அதனை பார்த்துக் கொள்ளுங்கள்’’ எனக்கூறி தகராறு செய்து, தானே வலையில் சிக்கிக் கொண்டதாகவும், இந்த தகவலை மாணவர்கள், கல்லூரி பேராசிரியர்களிடம் கொண்டு சென்றதாகவும், அப்போதும் நடவடிக்கை இல்லாததால், மெயில் மூலம் மிரட்டல் வந்து சிக்கலை உருவாக்கி விட்டது எனவும் சிலர் தகவல் தெரிவித்தனர். எப்படியோ தவறு நடந்தது உறுதி செய்யப்பட்டு விட்டதால் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை இருக்கும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags : student ,parents , Issue of the NEET exam ,head scam, student of fraud
× RELATED நாக்பூரிலிருந்து தமிழ்நாட்டுக்கு நடந்து வரும் போது மாணவர் உயிரிழப்பு