×

சிட்பண்ட் மோசடி வழக்கில் தலைமறைவான ராஜிவ் குமாரை பிடிக்க சொகுசு விடுதிகளில் தேடுதல் : சிபிஐ அதிரடி

புதுடெல்லி: சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருக்கும் கொல்கத்தா நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமாரை பிடிக்க, நட்சத்திர ஓட்டல்களில் சிபிஐ நேற்று சோதனை நடத்தியது. மேற்கு வங்க மாநிலத்தில் செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனம், 2,500 கோடி மோசடி செய்தது. இந்த வழக்கை கொல்கத்தா போலீஸ் கமிஷனராக இருந்த ராஜிவ் குமார் முறையாக விசாரிக்கவில்லை என்ற புகார் எழுந்தது. இதையடுத்து, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையில் ராஜிவ் குமார் மோசடி தொடர்பான ஆவணங்களை அழித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியது.

இதனிடையே ராஜிவ் குமாரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை உத்தரவை கொல்கத்தா உயர் நீதிமன்றம் சமீபத்தில் விலக்கி கொண்டது. அதோடு, வழக்கில் ஆஜராக சிபிஐ பிறப்பித்த சம்மனை ரத்து செய்யவும் மறுத்து விட்டது. ராஜிவ் குமார் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் தப்பி வந்தார். இதைத் தொடர்ந்து, அவரை கண்டுபிடிக்க உதவும்படி டிஜிபி, மாநில அரசின் தலைமைச் செயலர், உள்துறை செயலருக்கு சிபிஐ கடிதம் அனுப்பியது.
இந்நிலையில், அவரைத் தேடி சிபிஐ அதிகாரிகள் அலிபூரில் உள்ள நட்சத்திர விடுதிகள், கொல்கத்தாவின் கிழக்கு நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று தேடுதல் வேட்டை நடத்தினர். அவரை கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கும்படி கொல்கத்தா நீதிமன்றத்தை சிபிஐ நாடியுள்ளது. மேலும், ராஜிவ் குமார் இன்று காலை 11 மணிக்கு சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகும்படியும் சம்மன் அனுப்பி உள்ளது.

Tags : Rajiv Kumar ,CBI , Search in luxury hotels, catch Rajiv Kumar
× RELATED தலைமை தேர்தல் ஆணையருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு