×

8 டிஎம்சி அளவை எட்டியதால் கண்டலேறு அணையிலிருந்து ஒரு வாரத்துக்குள் தண்ணீர் திறப்பு: தமிழக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் ஆந்திரா அரசு உறுதி

சென்னை: கண்டலேறு அணையின் நீர்மட்டம் 8 டிஎம்சி அளவை எட்டியதால் இன்னும் ஒருவாரத்துக்குள் தமிழகத்துக்கான தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்தையில் ஆந்திர அரசு உறுதியளித்துள்ளது. சென்னை மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய 4 ஏரிகளுக்கும் இன்னும் தண்ணீர் வரத்து இல்லாததால் வறண்ட நிலையிலே கிடக்கிறது. அவ்வப்போது மழை பெய்தாலும் வறண்டு கிடந்த ஏரிகளில் இப்போது தான் புல், பூண்டுகள்  முளைத்துள்ளது. ஆனால் கடந்த ஜூலை மாதம் 10ம்தேதியில் இருந்து இந்த 4 ஏரிகளையும் சேர்த்து வெறும் 15 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. ஒரு மில்லியன் கன அடி கூட நீர் மட்டம் உயரவில்லை. மழைநீர் ஏரிகளுக்கு செல்ல முடியாத படி கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதும் இதற்கு ஒரு காரணம். இந்த நான்கு ஏரிகளில் தண்ணீர் வந்தால் மட்டுமே சென்னை மக்களுக்கு சீரான  குடிநீர் வழங்க முடியும். இதனால் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கான தண்ணீரை பெறும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
 பருவமழை அவ்வப்போது பெய்தாலும் இன்னும் சென்னை மக்களுக்கு சீரான குடிநீர் கிடைக்கவில்லை. லாரி தண்ணீரை எதிர்பார்த்து தான் காத்திருக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில், ஆந்திரா மாநில நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த மாதம் நல்ல மழை பெய்தது. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஆந்திர மாநிலத்தில் உள்ள சைலம் அணை வேகமாக நிரம்பியது. இந்த அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சோமசீலா அணைக்கு செல்லும். இந்த அணை நிரம்பினால் அங்கிருந்து கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். தற்போது சைலம் அணையில் 209டிஎம்சி தண்ணீர் இருப்பு  உள்ளதால், அங்கிருந்து சோமசீலா அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டு, தற்போது அங்கு 51.84 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் உள்ளது.  ஆந்திர அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருப்பதால், சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, பூண்டி ஏரிக்கு ஆண்டு தோறும் தமிழ்நாடு- ஆந்திர மாநில ஒப்பந்தப்படி கிடைக்கக்கூடிய கிருஷ்ணா நீரை கேட்டு  பெற தமிழக அரசு முயற்சி எடுத்தது. இந்த ஆண்டுக்கான முதல் தவணை காலமான ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை 8 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும்.

 இந்த தவணை காலம் இன்னும் ஒரு மாதத்துக்குள் முடிவடைய உள்ளதால் தமிழகத்துக்கான தண்ணீரை பெற அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் ஆந்திர முதல்வரை சந்தித்து தமிழகத்துக்கான தண்ணீரை கேட்டனர்.  அவரும் தண்ணீர் தருவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சோமசீலா அணையில் இருந்து கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  தினமும் அரை டிஎம்சி அளவில் கண்டலேறு அணையின் நீர் மட்டம் உயர்ந்து வந்தது. இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி 8டிஎம்சி அளவை எட்டியது. கண்டலேறு அணையில் 8 டிஎம்சி தண்ணீர் இருப்பு இருந்தால் மட்டுமே ஆந்திர அரசு  தமிழகத்துக்கான தண்ணீரை திறப்பது வழக்கம். தற்போது அந்த நீர்மட்டத்தை எட்டியுள்ளதால் தண்ணீரை பெற தமிழக அதிகாரிகள், ஆந்திர அதிகாரிகளுடன் நேற்று தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இன்னும் ஒரு வாரத்துக்குள் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று ஆந்திர அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். எனவே ஒரு வாரத்தில் தண்ணீர் திறப்பது உறுதியாகியுள்ள நிலையில் கிருஷ்ணா  கால்வாய் மூலம் தமிழக எல்லை பகுதியான ஊத்துக்கோட்டை வழியாக பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்டலேறு அணையில் திறக்கப்படும் தண்ணீர் பூண்டி ஏரியை வந்தடையும்பட்சத்தில் சென்னை மக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது குறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Tags : Andhra Pradesh ,government ,talks ,dam ,Tamil Nadu , continental dam, Andhra Pradesh, government ,Tamil Nadu
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...