×

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ். பதவிக்கான மெயின் தேர்வு இன்று தொடக்கம்: 5 நாட்கள் நடக்கிறது

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வு 5 நாட்கள் நடக்கிறது.மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான ேதர்வுகளை நடத்துகிறது. இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 896 பணியிடங்களை  நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் 2ம் தேதி நடந்தது. இத்தேர்வை சுமார் 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினர்.
ஜூலை 12ம் தேதி முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டது. இத்தேர்வில் இந்தியா முழுவதும் 11,845 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 610 பேர் வரை தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை முதல் தாள் தேர்வு (கட்டுரை வடிவிலானது), நாளை (21ம் தேதி) காலை இரண்டாம் தாள் (பொது அறிவு 1), மதியம் 2  மணி முதல் மாலை 5 மணி வரை மூன்றாம் தாள் (பொது அறிவு 2) தேர்வு நடக்கிறது.
22ம் தேதி (நாளை மறுநாள்) காலையில் 4ம் தாள் (பொது அறிவு 3), பிற்பகலில் 5ம் தாள் தேர்வு (பொது அறிவு4) நடக்கிறது. 28ம் தேதி காலையில் இந்திய ெமாழிகளில் ஒரு தாள் தேர்வு, பிற்பகலில் ஆங்கில தேர்வு நடக்கிறது. கடைசி நாளான  29ம் தேதி காலையில் விருப்பப்பாடம் முதல் தாள் தேர்வும், பிற்பகலில் விருப்பப்பாடம் இரண்டாம் தாள் தேர்வும் நடக்கிறது.

இந்த தேர்வு இந்தியா முழுவதும் 24 நகரங்களில் நடக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் மட்டும் தேர்வு நடக்கிறது. சென்னையில் சூளை ஜெயகோபால் கரோடியா பள்ளியிலும், எழும்பூரில் உள்ள மாநில பெண்கள்  மேல்நிலைப்பள்ளியிலும் தேர்வு நடக்கிறது.தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக ேதர்வு கூடங்களுக்கு தேர்வர்கள் வர வேண்டும். தேர்வு தொடங்கிய 10 நிமிடங்களுக்கு பின்னர் வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் யு.பி.எஸ்.சி.  அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தேர்வு கூடங்களுக்கு மின்னணு சாதனங்கள், தகவல் தொடர்பு உபகரணங்கள் கொண்டு செல்லக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



Tags : IAS ,IPS ,IRS , IAS, IPS, IRS , Main Examination,
× RELATED யுபிஎஸ்சி தேர்வுகளில் பின்தங்கும் தமிழக மாணவர்கள்