×

சென்னையில் விடிய விடிய மழை வீட்டு சுவர் இடிந்து விழுந்து பெண் பலி

* தாய், மகன், மகள் உயிர் தப்பினர் * மண்ணடியில் சோகம்

சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பெய்த பலத்த மழையில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியானார்.சென்னை பாரிமுனை மண்ணடி அய்யப்பசெட்டி தெருவை சேர்ந்தவர் பத்மினி (எ) ஜெரினாபானு (50). இவரது கணவர் நவாஸ்கான், கடந்த சில ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு லேனா குமார் என்ற மகனும், நசீரா என்ற மகளும்  உள்ளனர். இவர்கள் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களுடன் ஜெரினாவின் தாய் வசந்தா (70) வசித்து வருகிறார்.இந்நிலையில், மண்ணடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை கொட்டியது. ஜெரினா, தனது குடும்பத்தினருடன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார். அதிகாலை 4 மணியளவில் வீட்டின் பக்கவாட்டு சுவர் மற்றும் மேற்கூரை திடீரென  இடிந்து ஜெரினா தலையில் விழுந்தது. பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். வசந்தா, லேனாகுமார், நசீரா ஆகியோர் காயத்துடன் அலறி துடித்தனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.  காயம் அடைந்தவர்களை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

தகவலறிந்ததும் எஸ்பிளனேடு போலீசார், தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இடிந்து விழுந்த சுவர்களை அப்புறப்படுத்தி ஜெரினாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மண்ணடி பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.இதுகுறித்து போலீசார் கூறுகையில், “மண்ணடி பகுதியில் பல வீடுகள் பழமை வாய்ந்தவை. இங்கு வசிப்பவர்களை வேறு இடத்துக்கு செல்லும்படி மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். ஆனால் யாரும் செல்லவில்லை.  இதனால்தான் சுவர் இடிந்து ஜெரினா பலியாகியுள்ளார். ஜெரினா வசித்து வந்த வீடு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 50 ஆண்டு பழமையான ஓட்டு வீடு” என்றனர்.

Tags : Chennai ,house collapses ,House ,Woman Kills , Rain , Chennai, Woman, kills,collapses
× RELATED சென்னை முழுவதும் நடத்தப்பட்ட...