×

மானாமதுரை வங்கியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தப்பிய கும்பலை பிடிக்க 4 தனிப்படை: சிசிடிவியில் சிக்கிய இருவரிடம் விசாரணை

மானாமதுரை: மானாமதுரை வங்கியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தப்பிச்சென்ற கும்பலை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வங்கி சிசிடிவி பதிவில் சிக்கிய 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி  வருகின்றனர்.சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பாண்டியன் நகரை சேர்ந்தவர் சரவணன் (38). அமமுக மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்தார். இவர் கடந்த மே 26ம் தேதி மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பாக சிப்காட்  போலீசார், மானாமதுரையை சேர்ந்த முனியாண்டி மகன்கள் தங்கராசு, தங்கமணி, வேல்முருகன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் அனைவரும் ஜாமீனில் வந்தனர். சரவணன் கொலைக்கு பழிக்குப்பழி  வாங்குவதற்காக, அவரது உறவினர்கள் தொடர்ந்து முனியாண்டி குடும்பத்தினரை கண்காணித்து வந்தனர்.நேற்று முன்தினம் தங்கமணி, நண்பர் கணேஷ்நாத்துடன் டூவீலரில் மானாமதுரை பழைய பஸ் ஸ்டாண்ட் நோக்கி சென்றார். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பல் தங்கமணியை சரமாரியாக வெட்டியது. உயிர் பிழைக்க  அருகே இருந்த தேசிய வங்கிக்குள் சென்ற பின்னும், உள்ளே நுழைந்து கும்பல் சரமாரியாக வெட்டியது.

இதனையடுத்து தங்கமணியை காப்பாற்ற வங்கி காவலாளி செல்லநேரு துப்பாக்கியால் சுட்டார். இதில் கும்பலை சேர்ந்த தமிழ்செல்வத்துக்கு காலில் குண்டு காயம் ஏற்பட்டது. இவர் மற்றும் கணேஷ்நாத் சிவகங்கை அரசு மருத்துவமனையிலும்,  படுகாயமடைந்த தங்கமணி மதுரை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மானாமதுரை போலீசார் வழக்குப்பதிந்து, கொலை முயற்சியில் ஈடுபட்ட சலுப்பனோடையை சேர்ந்த தங்கராஜ், மச்சக்காளை, ஆவரங்காட்டை சேர்ந்த பூமிநாதன் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர். கும்பலை பிடிக்க 4 தனிப்படைகள்  அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வங்கி வாசலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் சந்தேகத்தின்பேரில் 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.காவலாளிக்கு பாராட்டு: வங்கியில் நடந்த கொலைவெறி தாக்குதல் சம்பவத்தின்போது பாதுகாப்பு பணியில் இருந்த வங்கி காவலாளியும், ஓய்வு பெற்ற ராணுவ வீரருமான செல்லநேரு தனது துப்பாக்கியால் கொலையாளிகளை நோக்கி சுட்டார்.  இதில் கொலைக்கும்பலை சேர்ந்த தமிழ்ச்செல்வத்தின் காலில் குண்டு காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் உயிருக்கு பயந்து வங்கியில் இருந்து தப்பி ஓடினர். சமயோசிதமாக துப்பாக்கியால் சுட்டு தங்கமணியின் உயிரையும், வங்கி  வாடிக்கையாளர்களையும் காப்பாற்றிய செல்லநேருவை ராமநாதபுரம் சரக டிஐஜி ரூபேஷ்குமார் மீனா, எஸ்பி ரோஹித்நாதன் ஆகியோர் பாராட்டி சான்றிதழ் வழங்கினர். மேலும், அவருக்கு தமிழக அரசின் வீரதீர செயலுக்கான விருது வழங்க  சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : gang ,Investigation ,men ,Manamadurai Bank Shot ,Manamadurai Bank 4 Cavalry , Shot, Manamadurai ,Bank,CCTV
× RELATED புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை