×

மோட்டார் வாகன திருத்த சட்டத்தை எதிர்த்து ஸ்டிரைக் தமிழகத்தில் 4 லட்சம் லாரிகள் ஓடவில்லை: நாடு முழுவதும் 100 கோடி சரக்கு தேக்கம்

சேலம்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நேற்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டனர். இதனால், 100 கோடி  மதிப்பில் சரக்குகள் தேக்கமடைந்துள்ளது. தமிழகத்தில் 4 லட்சம் லாரிகள் ஓடவில்லை. மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில், மோட்டார் வாகன திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்ததையடுத்து, உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்த மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின் படி,  போக்குவரத்து விதிமீறல்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிப்பு, வாகன பதிவு கட்டணம் உயர்வு, மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வு போன்றவை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் மற்றும் இதர வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து நாடு தழுவிய ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பில்  அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நேற்று நடத்தியது.

டெல்லி, அரியானா, உ.பி., ம.பி., குஜராத், மகராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு என அனைத்து மாநிலத்திலும் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் இயக்கப்படவில்லை. நாடு முழுவதும் சுமார் 40 லட்சம்  லாரிகள் நிறுத்தப்பட்டது. இதனால், சரக்கு போக்குவரத்து முற்றிலும் பாதிப்படைந்தது. தமிழகத்தை பொறுத்தவரை மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஸ்டிரைக்கில் முழுமையாக ஈடுபட்டது. இதனால், சுமார் 4 லட்சம் லாரிகள்  ஓடவில்லை. ஆங்காங்கே லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதுபற்றி அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாக குழு உறுப்பினர் சென்னகேசவன் கூறுகையில், “ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தால், நாடு முழுவதும் 100 ேகாடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கமடைந்துள்ளது. தமிழகத்தில் ரூ.10  கோடி மதிப்புள்ள சரக்குகள் ஏற்றப்படாமல் தேங்கியிருக்கிறது. இதனால் அரசுக்கு ₹1 கோடி வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 85 சதவீத லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்று ஓடவில்லை’’ என்றார்.



Tags : Tamil Nadu ,Strike ,Motor Vehicle Amendment Act Strike , Strike ,Motor Vehicle, 4 lakh trucks ,t running , Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...