×

கனமழை காரணமாக அரியலூர்-கடலூர் மாவட்டத்தை இணைக்கும் தரைப்பாலத்தில் உடைப்பு: பொதுமக்கள் அவதி

கடலூர்: கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே வெள்ளாற்றில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் சுமார் 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்தானது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலியில் ஒரு வார காலமாக விடிய விடிய இடைவிடாது மழை பெய்து வருகிறது. இது விவசாயிகளுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக உள்ளது. இருந்தபோதிலும் இந்த மழையானது ஒருசில பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணாடத்தை அடுத்த சௌந்திரசோழபுரம், கோட்டைக்காடு கிராமங்களிடையே வெள்ளாற்றின் குறுக்கே கடலூர், அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் இந்த தரைப்பாலம் செம்மண்ணால் தற்காலிகமாக அமைக்கப்பட்டது.

இந்த தற்காலிக பாதையை தான் அப்பகுதி கிராம மக்கள் அத்தியாவசிய போக்குவரத்து தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் இருந்து வரும் ஆணாதி ஓடை, உப்பு ஓடை ஆகிய இரண்டு ஓடைகளின் தண்ணீரும் வெள்ளாற்றில் கலந்து கடலில் கலக்கின்றன. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மண்ணரிப்பு ஏற்பட்டு தரைப்பாலமானது இன்று முற்றிலுமாக அடித்து செல்லப்பட்டது.

இதன் காரணமாக அந்த பாலம் வழியாக செல்லக்கூடிய பள்ளி மாணவ, மாணவிகள், நோயாளிகள், விவசாயிகள் என அனைவருமே பாதிப்புள்ளாகியுள்ளனர். இதை தொடர்ந்து 15க்கும் மேற்பட்ட கிராமமக்கள் சுமார் 15 கிலோ மீட்டர் வரை சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த ஆண்டு தமிழக அரசால் 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Breakdown ,Cuddalore ,district ,Ariyalur , Cuddalore, rain, flood, turf, traffic disruption
× RELATED ஆட்டோ மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழப்பு