×

அரவக்குறிச்சி பெருசு நகரில் குழாய் உடைந்து குடிநீர் சாக்கடையில் வீணாக கலக்கிறது

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி பெருசு நகரில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து கடந்த ஒரு மாதமாக தண்ணீர் தெருக்களில் ஓடி சாக்கடையில் கலந்து வீணாகின்றது. பரமத்தி மரவாபாளயம் காவிரி ஆற்றிலிருந்து காவிரி நீர் அரவக்குறிச்சி வழியாக பள்ளபட்டி பேரூராட்சி மற்றும் அரவக்குறிச்சி ஒன்றியத்திலுள்ள பல ஊராட்சிகளுக்கு பூமிக்கடியில் பெரிய குழாய் மூலம் கொண்டு சென்று வினியோகிக்கப்படுகின்றது. இந்நிலையில் போலீஸ் நிலையத்திலிருந்து எட்டியாக்கவுண்டனூர் செல்லும் சாலையில் பெருசு நகர் பிரிவு அருகே சாலையோரம் காவிரி குடிநீர் குழாய் உடைந்துள்ளது. இதிலிருந்து கடந்த ஒரு மாதமாக ஏராளமாக குடிநீர் வெளியேறி பெருசு நகர் தெருக்களில் குளம் போல் தேங்குகின்றது.

தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. அதிகப்படியான குடிநீர் பின்னர் புதுத்தெரு அருகில் சாக்கடையில் கலந்து வீணாகின்றது. மாவட்டம் முழுவதும் வறட்சியான நிலையில், குடிநீர் பற்றாக்குறையான இந்த சமயத்தில் குடிநீர் இப்படி தெருவில் ஓடி வீணாகும் அவலமான நிலை உள்ளது, பல முறை அதிகாரிகளிடம் கூறியும் இதுவரையிலும் சரி செய்யாமல் அலட்சியமாக உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம் இதனை கவனித்து குடிதண்ணீர் சாக்கடையில் கலந்து வீணாகமல் தடுக்க உடனடியாக நவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Arawakurichi ,Peru ,city ,Aravakurichi , Aravakurichi, drinking water
× RELATED காசி நகரம் பைரவ வழிபாடும்