×

விழுப்புரம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி, இருவர் படுகாயம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கள்ளக்குறிச்சியை அடுத்த மாதவச்சேரியை சேர்ந்த பொறியாளரான பாலமுருகனுக்கும் செம்படாக்குறிச்சியை சேர்ந்த பிரியதர்ஷினிக்கும் 7 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. புதன்கிழமை மாலை பாலமுருகன், பிரியதர்ஷினி மற்றும் அவரது தம்பி மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி நோக்கி வந்துள்ளனர். மூவருமே தலைக்கவசம் அணியவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து இருசக்கர வாகனத்தை சந்தோஷ் ஓட்டி வர, பின்னால் பாலமுருகனும் அவரையடுத்து பிரியதர்ஷினியும் அமர்ந்து சென்றுள்ளனர். கள்ளக்குறிச்சி அம்மன்நகர் அருகே வந்தபோது எதிரே வந்த மற்றோரு இருசக்கர வாகனம் இவர்களது வாகனம் மீது மோதியதில் பிரியதர்ஷினி சாலை நடுவேயும் பாலமுருகனும், சந்தோஷும் சாலையோரமும் விழுந்தனர்.

இந்த சம்பவத்தில் சாலைநடுவே விழுந்த பிரியதர்ஷினி மீது அவ்வழியாக வந்த லாரி மோதியதில் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலமுருகன், சந்தோஷ் மற்றும் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நாராயணன் என்பவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மூன்று பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்தது, மூவருமே தலைக் கவசம் அணியாமல் வந்தது என இந்த விபத்தில் விதிமீறல்களின் பங்கு பிரதானமாக இருக்கிறது. சிலநூறு ரூபாய் விலை கொண்ட தலைக்கவசத்தை வாங்கி அணிய மறுப்பதால் விலைமதிப்பே இல்லாத இது போன்ற உயிர்கள் பலியாவது தொடர்கதையாகிறது. அனைத்து தரப்பினருமே இதனை உணர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை கவனத்தோடு கடைபிடிக்க வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பாக உள்ளது.


Tags : Accident ,wheeler ,Villupuram , Villupuram, two-wheeler, accident, one killed, two injured
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த...