×

தரைப்பாலத்தில் தண்ணீர் ஓடுவதால் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்பு

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே தரைப்பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மன்னம்பாடி கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். எடையூரில் இருந்து மன்னம்பாடி வழியாக விருத்தாசலம், வேப்பூர், சேலம், கடலூர் ஆகிய பகுதிகளுக்கு பொதுமக்கள் தினமும் அன்றாட தேவைகளுக்காக சென்று வருகின்றனர். அதேபோல் மன்னம்பாடியில் இருந்து எடையூர் வழியாக பெண்ணாடம், திட்டக்குடி, தொழுதூர், பெரம்பலூர், திருச்சிக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், எடையூர்-மன்னம்பாடிக்கு இடையே தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலத்தை கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். நூற்றாண்டை கடந்தபோதும் இப்பகுதி மக்கள் தரைப்பாலத்தின் வழியாகத்தான் தங்களின் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மழை வெள்ளம் அதிகரித்து தரைப்பாலம் முழுவதும் மூழ்கியது. இதனால் அவ்வழியாக செல்லும் அரசு பேருந்துகள், பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. இதனால் பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் மன்னம்பாடி, விளாங்காட்டூர், கீரம்பூர், எடையூர், கோவிலூர், தே.புடையூர், சாத்தியம், சித்தூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின.

இதனால் தற்போது பயிர் செய்து நெற்பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கி பலத்த சேதமடைந்துள்ளன.இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, நாங்கள் நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்த தரைப்பாலத்தை பயன்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு தேர்தலின்போதும் இந்த தரைப்பாலத்தை மேம்பாலமாக ஆக்குவோம் என்னும் தாரக மந்திரத்தை மையமாக வைத்தே ஓட்டு கேட்பார்கள். ஆட்சிக்கு வந்ததும் எங்களை மறந்து விடுவார்கள். நாங்களும் தொடர்ந்து போராடி வருகிறோம், ஆனால் அரசு இதைப்பற்றி கண்டுகொள்வதே கிடையாது.

ஓரிருநாள் மழைக்கு கூட தாங்காமல் வெள்ளத்தில் மூழ்கி போகும் இந்த பாலம் தற்போது பெய்து வரும் தொடர்மழையால் பாலம் நீரில் மூழ்கி எங்களின் வாழ்வாதாரம் முழுவதும் பாழாகி விடும் நிலை உள்ளது. இதனால் இந்த பாலத்தை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மேலும் இந்த ஓடையில் தண்ணீர் வடிவதற்கு குறைந்தது 10 நாட்களுக்கு மேலாகும். அதுவரை எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறிதான். எனவே, இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் மன்னம்பாடி-எடையூர் இடையே மேம்பாலத்தை கட்டித் தரவேண்டும் என்றனர்.

Tags : ground , Water, radiation
× RELATED தேனியில் 2500 அரசு அலுவலர்கள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி