அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமிக்க தடை : தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது

சென்னை: அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியிட மாறுதல் செய்வது, ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாக உயர்நீதி மன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவின் அடிப்படையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் புதிய ஆசிரியர்களை நியமிக்க தடைவிதித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் சிலர் மதுரை உயர்நீதி மன்றத்தில் கடந்த ஆண்டு, பணி நியமன ஒப்புதல் கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் மதுரை கிளை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்து சில உத்தரவுகளை பிறப்பித்தது. அந்த உத்தரவை செயல்படுத்துவது தொடர்பாக தொடக்க கல்வி இயக்குநர் சில வழிகாட்டுதல்களை அரசுக்கு தெரிவித்துள்ளார். அதில், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன.  அப்படி செய்யும் போது, சில பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் உபரி ஆசிரியர்கள் இருப்பதும், உபரிப் பணியிடங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பணியிடங்களால் அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில், உபரி ஆசிரியர்கள் இருக்கும் சில பள்ளிகளில் அதே உபரி ஆசிரியர்களை கொண்டு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமல், நேரடி நியமனம் மூலம் புதிய ஆசிரியர்களை அந்தந்த நிர்வாகங்கள் நியமனம் செய்கிறது. அதற்கு நிர்வாக ஒப்புதல் கேட்டு வழக்கு தொடர்ந்து, அதன் மூலம் சாதகமான உத்தரவுகளையும் பெறுகின்றனர். இதனால் ஏற்கெனவே உள்ள ஆசிரியருக்கும், புதியதாக நியமிக்கப்படும் ஆசிரியருக்கும் சம்பளம் கொடுக்க அரசிடம்  நிதியுதவி பெற வேண்டியுள்ளது. அதனால் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய அரசுக்கு கடிதம் எழுதி, தொடக்க கல்வி இயக்குநர் அனுமதி வழங்க கேட்டுள்ளார். இது தொடர்பான விவரங்களையும் அரசுக்கு இயக்குநர் எழுதியுள்ளார். இதையடுத்து, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதியும், உபரி ஆசிரியர்களால் அரசுக்கு ஏற்பட்டு வரும் நிதியிழப்பை தவிர்க்கவும், மதுரை கிளை உயர்நீதி மன்றம் வழங்கியுள்ள உத்தரவின் பேரிலும், அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களை பணிி நிரவல் செய்வதில் விதிகளை பின்பற்றி உரிய நடவடிக்கை எடுக்க தொடக்க கல்வி இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்குநர் ஆகியோருக்கு அறிவுறுத்தலாம் என்று முடிவு செய்து அரசு ஆணையிடுகிறது.

இந்த அரசாணையில் 14 வழிகாட்டு நெறிமுறைகளை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. முக்கியமாக,  பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்ைகக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படுவதை இந்த பள்ளிகளுக்கு தொடர்ந்து கடைபிடிக்கலாம். நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் செய்யும் போது, இடைநிலை ஆசிரியர் தேவைப்பட்டால், அங்கு பட்டதாரி ஆசிரியர் உபரியாக இருந்தால், அந்த உபரி ஆசிரியரை கீழ்நிலை வகுப்புக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.  அதேபோல மேனிலை வகுப்புக்கு ஆசிரியர் தேவை இருந்தால், அங்கு கீழ்நிலை வகுப்பில் இருக்கும் உபரி ஆசிரியர்களை மேனிலை வகுப்புக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து அங்கு உபரி ஆசிரியர் இல்லாத நிலை இருந்தால் மாற்றுப் பணியில் சென்றுள்ள ஆசிரியரை மீண்டும் அதே பள்ளியில் பணியமர்த்தலாம். 1991-1992க்கு பிறகு மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப உதவி பெறும் பள்ளிகளுக்கு கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு இருந்தால், அந்த பணியிடங்கள் நிரந்தரமாக ஏற்படும் போது, நிரப்பக்கூடாது.

அந்தந்தபள்ளிகளில் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு முன்பு அந்த மாவட்டத்தில் கூடுதல் ஆசிரியர் யாரும் பணியாற்ற வில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்வதால் அரசுக்கு கூடுதல் செலவினம் ஏதும் ஏற்படக்கூடாது. மேலும் புதிய பணி நியமனங்கள் ஏதும் இந்த நிகழ்வில் மேற்கொள்ளக்கூடாது. மதுரைக் கிளை உயர்நீதி மன்ற உத்தரவின்படி, கூட்டு மேலாண்மை, இதர மேலாண்மைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை மாற்றுப் பணி மூலமாக பணியமர்த்தும் ஆசிரியர், (ஓய்வு பெறும் வரை) அங்கு எந்த ஒரு பணியிடத்திலும் பணி நியமனம் புதியதாக செய்யக்கூடாது. எந்த ஒருபுதிய ஆசிரியர் பணி நியமனத்துக்கும் ஏற்பு அளித்தல் கூடாது.
இவ்வாறு பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் அரசாணையில் தெரிவித்துள்ளார்.


Tags : government ,Tamilnadu ,teacher recruitment schools , Tamilnadu government,ban new teacher recruitment schools
× RELATED 2019-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது...