×

தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த புது சட்டம் : தனி இயக்ககம் தொடங்கவும் தமிழக அரசு முடிவு

சுயநிதியில் இயங்கும் தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் ‘தனியார் பள்ளிகள் முறைப்படுத்துதல் சட்டம் 2018’ என்ற சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை முறைப்படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கட்டணக் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், தனியார் பள்ளிகளை முறைப்படுத்துவதற்காக தமிழக அரசு தனியாக ஒரு சட்டம்  இயற்றி உள்ளது. குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு பிறகு அந்த சட்டம் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த சட்டத்தை அடிப்படையாக கொண்டு தனியார் பள்ளிகளை முறைப்படுத்துவதற்கான அரசாணை வெளியிடுவதற்காக பள்ளிக் கல்வித்துறை, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம், தொடக்க கல்வித்துறை ஆகியவற்றின் இயக்குநர் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினர். அந்த அரசாணை வெளியாகும் பட்சத்தில், இதுவரை இயங்கி வரும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கான இயக்ககம் மூடப்படும். அதற்கு பதிலாக தனியார் பள்ளிகள் இயக்ககம் என்ற பெயரில் இயங்கும். இந்த இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் தனியார் நர்சரி பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், சுயநிதி மாநிலப்பாடத் திட்டப் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள், அரசு நிதியுதவி பெறாத தனியார் சுயநிதியின் கீழ் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகள் வரும்.

தனியார் பள்ளிகளை முறைப்படுத்தும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்:


* தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு மன ரீதியான தொல்லை, உடல் ரீதியான தொல்லை, பாலியல் தொல்லை ஆகியவற்றில் இருந்து மாணவ, மாணவியரை பாதுகாப்பது உள்ளிட்ட உயிர், உடைமை பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பாடத் தொகுதி, பாடத்திட்டங்களை கற்பிப்பது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
* உரிய கல்வி வாரியத்தால் வகுத்தளிக்கப்பட்டுள்ள மதிப்பீட்டு வகைகளை தனியார் பள்ளிகள் பின்பற்ற வேண்டும்.
* உரிய வாரியம் மூலம் தேர்வு நடத்தப்படும் போதும், விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காகவும் தேவைப்படும் கட்டமைப்பு வசதிகளை தனியார் பள்ளிகள் செய்து கொடுக்க வேண்டும். ஆசிரியர்களையும் இந்த பணிகளுக்காக மாற்றுப்பணியில் அனுப்ப வேண்டும்.
* ஒவ்ெவாரு கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கையை தொடங்குவதற்கு முன்னதாக குறைந்தபட்சம் 30 நாட்கள் இருக்குமாறு செய்ய வேண்டும். அதுகுறித்து அறிவிப்பு பலகை மற்றும் இணைய தளத்தில் வெளியிட வேண்டும்.
* கடந்த 2009ம் ஆண்டு அமைக்கப்பட்ட தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கட்டணத்தை தவிர வேறு எந்த பெயரிலும் பிற கட்டணங்கள் பெறக்கூடாது.
* பள்ளிகள் அல்லது பாடப்பிரிவுகள் மூடப்படும் நிலை ஏற்பட்டால் முன்கூட்டியே உரிய அதிகார அமைப்புக்கு தெரிவிக்க வேண்டும்.
மேற்கண்ட முக்கிய விதிகள் வரையறைகள், கட்டுப்பாடுகள் என 100க்கும் மேற்பட்ட கட்டுப்பாடுகளை இந்த சட்டத்தில் அரசு தெரிவித்துள்ளது.

* இதுவரை இயங்கி வரும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கான இயக்ககம் மூடப்படும்.
* அதற்கு பதிலாக தனியார் பள்ளிகள்  இயக்ககம் என்ற பெயரில் இயங்கும்.
* இந்த இயக்ககத்தின் கட்டுப்பாட்டில்  தனியார் நர்சரி பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், சுயநிதி மாநிலப்பாடத்  திட்டப் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள், அரசு நிதியுதவி பெறாத தனியார் சுயநிதியின் கீழ் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகள் வரும்.

Tags : schools ,Tamil Nadu Government New ,Government ,Tamil Nadu , New law to regulate, private schools, Tamil Nadu Government
× RELATED சொத்துக்காக மாமனார், கணவரை கொன்றதுடன்...