முதல்வர் எடப்பாடி பங்கேற்ற நிகழ்ச்சியில் வட்ட செயலாளரிடம் 16,000 பிக்பாக்கெட்: அதிமுக உறுப்பினர் கைது

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில், அதிமுக வட்ட செயலாளரிடம் 16 ஆயிரம் பணத்தை பிக்பாக்கெட் அடித்த அதிமுக உறுப்பினரை போலீசார் கைது செய்தனர். பெரியாரின் பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. மாநிலம் முழுவதும் பெரியார் சிலைக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.  சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முதல்வர் நிகழ்ச்சி என்பதால் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதில், தி.நகர் பகுதி அதிமுக 114வது வட்ட செயலாளர் சின்னையா (54) கலந்து கொண்டார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அதிமுக கரைவேட்டி கட்டிய நபர் ஒருவர், சின்னையாவின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த ₹16 ஆயிரம் பணத்தை பிக்பாக்கெட் அடித்துள்ளார். இதை சின்னையா கையும் களவுமாக பிடித்து பாதுகாப்பு பணியில் இருந்த தேனாம்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் பிக்பாக்கெட் அடித்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது கோவை மாவட்டம் சீத்தாநாயக்கன் பாளையம் இளங்கோவடிகள் வீதியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் முருகன் (49) என தெரியவந்தது. அதைதொடர்ந்து சின்னையா கொடுத்த புகாரின்படி முருகனை போலீசார் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>