×

மானாமதுரை அமமுக நிர்வாகி கொலைக்கு பழிவாங்க விரட்டியபோது வங்கியில் புகுந்தவரை வெட்டிய கும்பல் மீது காவலாளி துப்பாக்கிச்சூடு

* 2 பேர் படுகாயம்; ஒருவர் குண்டுகாயம்
* வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம்

மானாமதுரை: மானாமதுரை வங்கியில் கொலை முயற்சியில் ஈடுபட்ட கும்பல் மீது, செக்யூரிட்டி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவருக்கு குண்டு காயம் ஏற்பட்டது. கும்பல் தாக்கியதில் 2 பேர் படுகாயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, பாண்டியன் நகரை சேர்ந்தவர் சரவணன் (38). அமமுக மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்தார். இவர் கடந்த மே 26ம் தேதி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக சிப்காட் போலீசார், மானாமதுரையை சேர்ந்த முனியாண்டி மகன்கள் தங்கராசு, தங்கமணி, வேல்முருகன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். கைதான அனைவரும் பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார்கள். சரவணன் கொலைக்கு பழிக்குப்பழி வாங்குவதற்காக, அவரது உறவினர்கள் தொடர்ந்து முனியாண்டி குடும்பத்தினரை கண்காணித்து வந்தனர்.

நேற்று நண்பகல் 12 மணியளவில் தங்கமணி, தனது டூவீலரில் மானாமதுரை பழைய பஸ் ஸ்டாண்ட் நோக்கி சென்று கொண்டிருந்தார். அங்குள்ள தேசிய வங்கி வளைவில் வந்தபோது, அங்கு பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த மர்மக்கும்பல் அவரை சரமாரியாக வெட்ட துவங்கினர். உடனே தங்கமணி உயிரை காப்பாற்றி கொள்ள வங்கி மாடிப்படி வழியாக ஏற முயன்றார்.  விரட்டி வந்த மர்ம நபர்கள் வங்கிக்குள் வைத்து தங்கமணியை வெட்டினர். விலக்க வந்த தங்கமணி ஆதரவாளர் கணேஷ்நாத் என்பவருக்கும் கையில் வெட்டு விழுந்தது. இதை கண்டு வங்கி காவலாளி செல்லநேரு அக்கும்பலை எச்சரித்துள்ளார். ஆனாலும் அவர்கள் தங்கமணியை வெட்டி கொண்டே இருந்தனர். இதையடுத்து காவலாளி செல்லநேரு, தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அக்கும்பலை நோக்கி சுட்டார். இதில், கும்பலில் இருந்த தமிழ்ச்செல்வம் என்பவருக்கு காலில் குண்டு காயம் ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். துப்பாக்கியால் சுட்டதுமே அக்கும்பல் தப்பியோடியது.

வங்கியில் கொலை முயற்சி, துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் வாடிக்கையாளர்கள் அலறியடித்து அங்குமிங்கும் சிதறி ஓடினர். வங்கி ஊழியர்கள் தங்கள் இருக்கையின் அடியில் பயத்துடன் பதுங்கினர். தகவலறிந்ததும் மானாமதுரை டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் வந்து விசாரணை நடத்தினர். காயமடைந்த தங்கமணி, குண்டு காயமடைந்த தமிழ்ச்செல்வத்தை மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தங்கமணி மதுரை அரசு மருத்துவமனைக்கும், தமிழ்ச்செல்வம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். மானாமதுரை போலீசார் வழக்குப்பதிந்து, தமிழ்ச்செல்வம் தகவலின்பேரில் கொலை முயற்சியில் ஈடுபட்ட சலுப்பனோடையை சேர்ந்த தங்கராஜ், மச்சக்காளை, ஆவரங்காட்டை சேர்ந்த பூமிநாதன் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர். சம்பவ இடத்தை டிஐஜி ஓம்பிரகாஷ் மீனா பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.


Tags : Ammunition Administrator ,gangster ,Manamadurai ,administrator ,bank ,killing ,Manamadurai amamuka ,guard , Manamadurai, Ammk Administrator, Murder, Guard, Gunman
× RELATED நில மோசடி தொடர்பாக கவுதமி அளித்த...