×

ஒட்டன்சத்திரம் அருகே மக்களை அச்சுறுத்தும் ‘ஒற்றை யானை’: வனத்துறையினர் கவனிப்பார்களா?

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே மக்களை அச்சுறுத்தி வரும் ஒன்றை யானையை காட்டுப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மலை கிராமங்களான வடகாடு, பால்கடை, பெத்தேல்புறம், வண்டிப்பாதை, புலிக்குத்திக்காடு உள்பட பல்வேறு மலை கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள், சிறுத்தைப்புலிகள், மான்கள், காட்டெருமைகள், மலைப்பாம்புகள் என பல்வேறு உயிரினங்கள் உள்ளன. இந்த நிலையில், சிறுவாட்டுகாடு பகுதியில் நேற்று முதல் ஒற்றை யானை சாலையில் நின்று கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

மேலும், ஒட்டன்சத்திரத்திலிருந்து இரவு நேரத்தில் உணவுப் பொருட்களை வாங்கிச் சென்ற பெத்தேல்புரம், வடகாடு பகுதி பொதுமக்களை சாலையில் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘கடந்த 3 மாதங்களுக்கு முன் யானை ஒன்று, ரேஷன் கடைகளில் புகுந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடியது. தற்போது ஒற்றை யானை விவசாயிகளின் நிலங்களையும் சேதப்படுத்தி வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இப்பகுதியில் தற்போது சுற்றித்திரியும் ஒற்றை யானையால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே யானையை காட்டுப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.


Tags : Single Elephant, Forest Department
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...