×

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் பிரோகித்தை ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சில நிமிடங்களுக்கு முன்னதாக திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்திருந்தார். மேலும் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என திமுக தரப்பிலும், ஆளுநர் மாளிகை வட்டாரத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளன. திமுக தலைவர் ஸ்டாலினின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பில் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஆளுநருடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியானது. குறிப்பாக தற்போது உள்ள அரசிய சூழலில் மத்திய அரசு ஒரே நாடு, ஒரே மொழி என்ற கொள்கை மூலம் இந்தியை அனைத்து மாநிலங்களிலும் பொதுவான மொழியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு திமுக தரப்பு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக வருகிற 20ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஆளுநர் சந்திப்பில் மத்திய அரசின் இந்த நடவடிக்கை தொடர்பாக பேச உள்ளதாக கூறப்பட்டது. மேலும், இந்தி மொழியை திணிப்பதன் காரணமாக மாநிலங்களில் எந்த வித பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து கருத்துக்களை ஆளுநரிடம் தெரிவிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. இது தவிர, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என மாநில அரசு அரசாணை வெளியிட்டது தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாநில அரசின் இந்த முடிவை திரும்பப் பெற ஆளுநரிடம் வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் ஆளுநர் சந்திப்பில் ஆலோசிக்கப்படும் விஷயங்கள் குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. தற்போது தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழலில் ஆளுநர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.

Tags : MK Stalin ,Governor ,DMK ,Tamil Nadu , Chennai,Governor Banwarlal Brokit meets DMK leader, MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...