×

குற்றவியல் மேல்முறையீடு விசாரணையில் காவல் ஆய்வாளர் ஆஜராகாவிட்டால் பிடியாணை பிறப்பிக்கப்படும்: உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு

மதுரை: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் குற்றவியல் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின்போது விசாரணை அதிகாரியான காவல்ஆய்வாளர் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். தவறினால் பிடியாணை பிறப்பிக்கப்படும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கொலை வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் வழங்கும் தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுகின்றன. குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டால் அவர்களின் விடுதலையை எதிர்த்து சம்பந்தப்பட்ட போலீசார் தரப்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.

இந்த வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது அந்த வழக்கின் விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளர் நீதிமன்றத்தில் ஆஜராகி அரசு வழக்கறிஞருக்குத் தேவையான தகவல்களை வழங்க வேண்டும் என்பது நடைமுறையாக இருந்தது. தற்போது இந்த நடைமுறை மறைந்து காவல் ஆய்வாளருக்கு பதில் மேல்முறையீட்டு விசாரணையில் இருக்கும் வழக்கு தொடர்பாக எந்த விபரமும் தெரியாத சார்பு ஆய்வாளர் அல்லது தலைமைக் காவலர்கள் பெயரளவுக்கு ஆஜராகியுள்ளனர். நீதிபதிகளோ, அரசு வழக்கறிஞரோ வழக்கு தொடர்பாக இவர்களிடம் ஏதாவது கேட்டால் தெரியாது என்றே சொல்கின்றனர். இதனால் விசாரணை பாதிக்கப்படுகிறது.

இதையடுத்து குற்றவியல் மேல்முறையீட்டு விசாரணையின் போது வழக்கின் விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளர் நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் நீதிபதி எஸ்.வைத்தியநாதன், என்.ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் இன்று உத்தரவிட்டுள்ளனர். நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் குற்றவியல் வழக்கின் மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையின்போது சம்பந்தப்பட்ட வழக்கின் விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என கூறியுள்ளனர். தவறினால் அவர்கள் நேரில் ஆஜராக நீதிமன்றத்தில் இருந்து சம்மன் அனுப்பப்படும். இந்த உத்தரவை உயர்அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

Tags : Inspector ,Criminal Appeal Trial , Criminal Appeal, Investigation, Police Inspector, Bailiff, High Court Branch, Order
× RELATED புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து...