×

அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான் வழியே செல்ல அனுமதிக்குமாறு இந்தியா கோரிக்கை!

புதுடெல்லி: அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான் வழியே செல்ல, இந்தியா தரப்பில் முறையாக அனுமதி கோரப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வரும் 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஐநா பொதுச்சபையில் வரும் 27ம் தேதி அவர் உரையாற்றுகிறார். அதே நாளில், மோடியை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஐநா சபையில் உரையாற்ற உள்ளார். 2வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் ஐநா பொதுச்சபையில் மோடி முதல் முறையாக உரையாற்ற உள்ளார். இதில் கலந்துகொள்ள வரும் பல நாட்டு தலைவர்களை, நியூயார்க் நகரில் பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஒருவார கால சுற்றுப்பயணம் வரும் பிரதமர் மோடியை வரவேற்க ஹூஸ்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடியின் விமானம், பாகிஸ்தான் வான்வழியே செல்ல அனுமதிக்குமாறு இந்தியா தரப்பில் முறையாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கோரிக்கையை அடுத்து, பாகிஸ்தானின் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக்கு பின்னரே அனுமதி வழங்குவது குறித்து தெரிவிக்கப்படும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக, குடியரசுத் தலைவர் வெளிநாடு செல்வதற்குப் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த இந்தியா, அந்நாட்டு அரசிடம் அனுமதி கோரியது. ஆனால் குடியரசு தலைவர் செல்லும் விமானத்துக்கு அனுமதி வழங்க பாகிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்தது. காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்த முடிவை எடுத்திருப்பதாக விளக்கமளிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வழியே செல்ல அனுமதி கோரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : India ,Modi ,PM ,trip ,US ,Pakistani ,airspace , US, Prime Minister Modi, plane , Pakistan, airspace,India
× RELATED என்னை வீழ்த்த வெளிநாட்டு சக்திகள் சதி: பிரதமர் மோடி பேச்சு