×

பொது மொழி என ஒன்று இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது..ஆனால் இந்தியை எங்கும் திணிக்க கூடாது: நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

சென்னை: பொது மொழி என ஒன்று இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது தான், ஆனால் இந்தியை எங்கும் திணிக்க கூடாது நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பதிவில், இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். எனவே, அதை தேசிய மொழியாக்க வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன், என கூறியிருந்தார். அமித்ஷாவின் இந்த இந்தி திணிப்பு குறித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமித்ஷாவின் கருத்திற்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசு இந்தியை திணிப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்தி திணிப்பு குறித்து சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், இந்தியா மட்டுமல்ல எந்த நாடாக இருந்தாலும் பொது மொழி என ஒன்று இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது. ஆனால், துரதிஷ்டவசமாக இந்தியாவில் பொது மொழியை கொண்டுவர முடியாது. எனேவ, எந்த மொழியையும் எங்கும் திணிக்க முடியாது. குறிப்பாக இந்தி மொழி தணிப்பை தமிழகத்தில் மட்டுமல்லாது தென்னிந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வடக்கில் உள்ள பல மாநில மக்களும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், என்று கூறியுள்ளார். இதையடுத்து, பேனர் கலாச்சாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த ரஜினி, பேனர் கலாச்சாரம் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். ரசிகர்களை பேனர் வைக்க வேண்டாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளேன், என கூறியுள்ளார்.


Tags : country , Hindi imposition, actor Rajinikanth, banner, Tamil Nadu
× RELATED நாட்டின் உண்மையான ஹீரோக்கள்!!:...