×

திருவலஞ்சுழியில் 20 ஆண்டுகளாக சாலை வசதியின்றி அவதிப்பட்டு வரும் நரிக்குறவர் மக்கள்

கும்பகோணம்: திருவலஞ்சுழியில் 20 ஆண்டுகளாக சாலை வசதியின்றி நரிக்குறவர் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சாலை அமைத்து தராவிட்டால் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். கும்பகோணம் அடுத்த திருவலஞ்சுழி ஏழுமாந்திடலில் 70க்கும் மேற்பட்ட நரிக்குறவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நரிக்குறவர் மக்களுக்கு என்று மாவட்ட நிர்வாகம், ஏழு மா நிலங்களை வழங்கியதால் அப்பகுதிக்கு ஏழுமாந்திடல் என்ற பெயர் வந்தது. அவர்களுக்கு திருவலஞ்சுழி ஊராட்சி ரயில்வே கேட் அருகில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திடலில் மனை அமைத்து 20 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்தனர். இந்த மனைகளில் 70 நரிக்குறவர் மக்கள் தனித்தனியாக கூரை வீடுகளை கட்டி கொடுத்தனர். ஆனால் பாதை அமைத்து கொடுக்காமல் வரப்புகளில் சென்று வரும் வகையில் வழிகளை ஏற்படுத்தி கொடுத்தனர்.

அப்போது நரிக்குறவர் மக்கள், மாவட்ட நிர்வாகத்திடம் சாலை வசதி குறித்து கேட்டபோது விரைவில் ஏற்படுத்தி தரப்படும் என்று உத்தரவாதம் அளித்தனர். ஆனால் அதன்பின் நரிக்குறவர் மக்களை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். இதனால் கடந்த 20 ஆண்டுகளாக சாலை வசதிகள் இல்லாமல் மழை காலங்களில் சேறும் சகதியில் சென்று வரும் அவலநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் ஏழுமாந்திடல் நரிக்குறவர் மக்கள் சென்று வரும் வரப்புகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் நரிக்குறவர் மக்கள் வெளியில் சென்றுவர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஏழுமாந்திடல் செல்லும் சாலைகள் சேறும் சகதியுமாக இருப்பதால் அதில் நடந்து செல்லும் நரிக்குறவர் மக்களுக்கு காலில் அரிப்பு, தடிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் சிறுவர் முதல் முதியவர் வரை வரப்பு சாலைகளை பயன்படுத்தாமல் உயிருக்கு ஆபத்தான ரயில் தண்டவாளத்தை கடந்து சென்று வருகின்றனர். இதேபோல் அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்து பல மாதங்களானதால் அதில் பாசிகள், புழுக்கள் உற்பத்தியாகி குடிப்பதற்கே லாயக்கற்ற நிலையில் உள்ளது. எனவே திருவலஞ்சுழி ஏழுமாந்திடல் நரிக்குறவர் காலனிக்கு செல்ல சாலை வசதி, தரமான குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சுந்தர் கூறுகையில், ஏழுமாந்திடம் நரிக்குறவர் காலனி, வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு தொகுதியாகும். நாங்கள் ஆண்டுதோறும் படும் கஷ்டங்கள் குறித்து அமைச்சரிடம் முறையிட்டோம். அவரும் கடந்த ஓராண்டுக்கு முன் ரூ.13 லட்சம் நிதியை ஒதுக்க ஒதுக்க உத்தரவிட்டார். ஆனால் நிதி ஒதுக்கி ஓராண்டாகியும் சாலை போடும் பணி அப்படியே கிடப்பில் போட்டப்பட்டுள்ளன. அமைச்சரின் உத்தரவை ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாத நிலை உள்ளது என்றார்.

Tags : Nerikuruvaruvar ,Kumbakonam ,Thiruvalluvazhi , Kumbakonam, Thiruvalluvazhi
× RELATED கும்பகோணத்தில் இறந்த நிலையில்...