×

இருளில் மூழ்கியது குமாரபாளையம்: ஜெனரேட்டர் இயக்காததால் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி

குமாரபாளையம்: குமாரபாளையம் நகரில் பெரும்பான்மையான பகுதிகளில் நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருளில் மூழ்கியது. ஜெனரேட்டர் இருந்தும் இயக்காததால் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.
குமாரபாளையம் நகராட்சியில் வேதாந்தபுரம், அரசு மருத்துவமனை, ராமர்கோவில் பகுதிகளில் நேற்று மாலையிலிருந்தே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுதொடர்பாக மின்வாரியத்தை தொடர்பு கொண்டபோதும் அதற்கான உரிய பதில் தெரிவிக்காததால் ஏமாற்றமே மிஞ்சியது. அரசு மருத்துவமனையில் நோயாளிகள் கொசுக்கடியால் அவதிப்பட்டனர். ஜெனரேட்டர் இருந்தும் அதற்கான டீசல் இல்லாததால் இயக்கப்படவில்லை. இதனால், மருத்துவமனை இருளில் மூழ்கியது.
மின்சாரம் இல்லாததை அறிந்த திமுகவினர் பலரும் அங்கு விரைந்து சென்றனர்.

முன்னாள் நகரமன்ற தலைவர் சேகர் மின்வாரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசிய போதிலும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசிய போதிலும், உடனடியாக ஜெனரேட்டர் இயக்கப்படும் என உறுதியளித்தனர். இரவு 10 மணி தாண்டிய போதிலும் ஜெனரேட்டர் இயக்கப்படவில்லை. ஜெனரேட்டருக்கான டீசல் வாங்கித்தருவதாக திமுகவினர் மன்றாடிய போதிலும் அதை மருத்துவமனை நிர்வாகம் ஏற்கவில்லை. இதனால், நோயாளிகள் மனஅழுத்தத்திற்கு ஆளாகினர். இருளில் மூழ்கிய மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள், செவிலியர்களும் செல்போன் வெளிச்சத்திலேயே நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தனர்.

Tags : Kumarappalayam ,state hospital ,Government Hospital , Government Hospital
× RELATED மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து...