×

தலைமை நீதிபதி தஹில் ரமானி பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மனுத்தாக்கல்!

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி பணியிட மாற்றத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள வி.கே.தஹில் ரமானி மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி தனது பதவியை கடந்த 6ந் தேதி ராஜினாமா செய்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதன் பின்னர் கடந்த 9ம் தேதி முதல் அவர் உயர்நீதிமன்றத்திற்கு வரவில்லை. அன்று அவர் விசாரிப்பதாக இருந்த வழக்குகளை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி விசாரித்தார். அதன் பின்னர் கடந்த வாரம் 5 நாட்களும் அவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை.

இதன்காரணமாக, அவரது அமர்வில் வழக்குகள் இதுவரை பட்டியலிடப்படவில்லை. இந்நிலையில், தஹில் ரமானியை மேகாலயாவுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க குடியரசுத் தலைவர் செயலருக்கு தடை விதிக்க வேண்டும் என, வழக்கறிஞர் கற்பகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்தார். வழக்கறிஞர் கற்பகம் சார்பாக, நீதிபதிகள் சத்தியநாராயணன், சேசஷாயி அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் பிராபகர் முறையிட்டார். தஹில் ரமானியின் ராஜினாமா கடிதம் மீது குடியரசு தலைவர் இதுவரை முடிவெடுக்காத நிலையில், கொலீஜியம் பரிந்துரைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தஹில் ரமானியை மேகாலயாவுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க குடியரசுத் தலைவர் செயலருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் சார்பில் முறையிடப்பட்டது. அப்போது, கொலீஜியத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடாமல் ஏன் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளீர்கள் என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொலீஜியம் முடிவுக்கு எதிராக தாங்கள் வழக்கு தொடர்ந்திருந்தாலும், கொலீஜியத்தின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்போவது குடியரசுத் தலைவர் தான். ஒப்புதல் அளிக்கப்பட்ட அறிவிப்பானது குடியரசு தலைவரின் செயலாளர் அலுவலகம் மூலமாகவே வெளியிடப்படும். எனவே, செயலாளருக்கு எதிராகவே உத்தரவு கோருகிறோம் என்பதால், இந்த மனுவானது உயர்நீதிமன்றத்தில் விசாரிக்க உகந்த வழக்கு தான் என்று விளக்கமளித்தார். மேலும், கொலீஜியத்தில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்தது, நிர்வாக உத்தரவு என்பதால் உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் எனவும் வழக்கறிஞர் பிரபாகர் குறிப்பிட்டார். இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த மனுவானது பட்டியலிடப்பட்ட பின்னர் விசாரணைக்கு உகந்ததா என அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கானது நாளை, அல்லது நாளை மறுநாள் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Chief Justice of India Tahil Ramani ,Madras High Court ,Chennai , Tahil Ramani, Madras High Court, Advocate, Petitioner
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...