×

ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கிறது: முறைவைத்து தண்ணீர் வழங்குவதால் சம்பா சாகுபடி சந்தேகம்

சேதுபாவாசத்திரம்: முறை வைத்து தண்ணீர் வழங்குவதால் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்று சேரவில்லை. இதனால் ஏரி, குளங்கள் வறண்டு கிடப்பதால் சம்பா சாகுபடி செய்ய முடியுமா என்ற சந்தேகத்தில் விவசாயிகள் கவலையில் உள்ளனர். தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிகளில் போதுமான மழை பெய்யாததால் ஏரி, குளங்கள் வறண்ட நிலையிலேயே இருந்து வருகிறது. 30 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கமாக நடைபெற்று வந்த சம்பா சாகுபடி கடந்த 5 ஆண்டுகளாக கைவிட்டு போனது. இந்தாண்டு மேட்டூர் அணை கடந்த மாதம் 13ம் தேதி திறக்கப்பட்ட நிலையில் அதிக மகசூல் தரக்கூடிய ஆடிப்பட்டம் கைவிட்டு போனது. சேதுபாவாசத்திரம் பகுதியில் 4,600 ஹெக்டேர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த பகுதிகளுக்கு கல்லணையில் இருந்து ஈச்சன்விடுதி என்ற இடத்திலிருந்து பிரிவு வாய்க்கால் உள்ளது. அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் நவக்குழி என்ற இடத்தில் சேதுபாவாசத்திரம், புதுப்பட்டினம் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்படுகிறது.

சேதுபாவாசத்திரம் வாய்க்கால் 5ம் நம்பர், 6ம் நம்பர் வாய்க்கால் என இரு பிரிவுகளாக செல்கிறது. 4,500 கன அடி கொள்ளளவு கொண்ட கல்லணை கால்வாயில் 2,000 கன அடி தண்ணீர் மட்டுமே எடுக்கப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் அதற்குமேல் அதிகமாக தண்ணீர் எடுத்தால் கரைகளில் உடைப்பு ஏற்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் கல்லணை கால்வாய் தூர்வாரப்பட்டு கரை கட்டுமான பணிகளை செய்யாததே இதற்கு காரணம். கடைமடை பகுதிக்கு அணை திறந்து 35 நாட்களுக்கு மேலாகிறது. 3 நாட்கள் வீதம் முறை வைத்து வழங்கப்பட்ட தண்ணீர் கடந்த முறை 5 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது. ஆடிப்பட்டம் கைவிட்டுபோன நிலையில் கடைமடை விவசாயிகள் சாகுபடியை கூட கருத்தில் கொள்ளாமல் முதலில் குடிநீர் பஞ்சத்தை போக்க வேண்டும் என்ற நிலையில் மேட்டூர் அணை திறந்து கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்தவுடன் ஏரி, குளங்களை நிரப்ப வேண்டுமென தீவிரமாக செயல்பட்டு வந்தனர். ஆனால் இதுவரை ஒரு ஏரியில் கூட தண்ணீர் முழுமையாக நிரப்ப முடியவில்லை. முறை வைத்து வழங்கப்படும் தண்ணீரும் முழு கொள்ளளவு வழங்கவில்லை. கடைமடை பகுதியில் தற்போது பரவலாக மிதமான மழை பெய்ய தொடங்கியுள்ள நிலையிலும் கூட தற்போது முறை வைத்து வழங்கிய தண்ணீர் கடைமடையின் கடைசி வரை சென்றடையவில்லை. அதேநேரம் ஊமத்தநாடு, நாடியம், கொரட்டூர், பெருமகளூர், சோலைக்காடு, விளங்குளம் போன்ற பகுதிகளில் உள்ள 1,500 ஏக்கருக்கு மேல் பாசனம் தரக்கூடிய பெரிய ஏரிகளும், 300க்கும் மேற்பட்ட சிறு சிறு குளங்களும் வறண்ட நிலையிலேயே உள்ளது.

தற்போது கடைமடை விவசாயிகள் நாற்று விடுவதற்கான ஆயத்த பணிகளை கூட மேற்கொள்ளவில்லை. விதை நெல்லை இதுவரை யாரும் கையில் எடுக்கவில்லை. அதேநேரம் கடைமடை பகுதிக்கு அணை திறந்த நாள் முதல் 5 நாட்கள் வீதம் தண்ணீர் முறைவைத்து வழங்கி இருந்தால் கூட ஏரி, குளங்களும் நிரம்பி இருக்கும். ஆடிப்பட்டம் நாற்று விடும் பணிகளும் நிறைவடைந்திருக்கும். ஆனால் அளவுக்கு அதிகமான தண்ணீர் அணைக்கு வந்து உபரிநீர் கடலில் கலக்கும் சூழ்நிலையிலும் கடைமடை விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். எனவே கடைமடை பகுதிக்கு சம்பா சாகுபடிக்கு நாற்று விடும் வகையில் முறை வைக்காமல் தண்ணீர் வழங்க வேண்டும். முறை வைக்காமல் தண்ணீர் வழங்கினால் நாற்று விடும் பணியும் நிறைவடைந்து விடும். அதேநேரம் ஏரி, குளங்களும் முழுமையாக நிரம்பி விடும். முறை வைத்து தண்ணீர் வழங்கினால் இந்தாண்டும் சம்பா சாகுபடி நடைபெறுவது சந்தேகம் தான். எனவே கடைமடை பகுதிக்கு முறை வைக்காமல் தண்ணீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Lake ,Samba , Samba cultivation, doubt
× RELATED குண்ணம் ஊராட்சியில் தனியார்...