×

அமலைசெடிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட மேலப்பாவூர் குளம் தூர்வாரப்படுமா?

பாவூர்சத்திரம்: கீழப்பாவூர் அருகே அமலைசெடிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட மேலப்பாவூர் குளம் முறையாகத் தூர்வாரப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கீழப்பாவூர் வட்டாரம் விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கீழப்பாவூர், மேலப்பாவூர், குறும்பலாப்பேரி, சாலைப்புதூர், திப்பணம்பட்டி, ஆவுடையானூர், வெள்ளகால், துவரங்காடு, இடையர்தவணை, மகிழ், அடைக்கலப்பட்டணம், அருணாப்பேரி, நாகல்குளம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிராமங்களில் கீழப்பாவூர், மேலப்பாவூர் குளத்தின் மூலமாகவும், கிணற்றுப் பாசனம் மூலமூம் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுவாக மேற்குத் தொடர்ச்சி மலையில் சிறுமழை பெய்தால் கூட பெருக்கெடுக்கும் தண்ணீரால் இப்பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பி மறுகால் பாய்வது உண்டு. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மழை சரிவரப்பெய்யாததால் இப்பகுதி குளங்கள் நிரம்புவது அரிதாகிவிட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து நீர்ப்பாதைகள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அமலை செடிகளும் ஆக்கிரமித்துள்ளன. இதுவிஷயத்தில் அதிகாரிகள் பாராமுகத்தோடு பராமரிப்பின்றி இருந்து வருவதால் இதுபோன்ற அவலம் தொடர்வதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனிடையே இந்தாண்டு பெய்த கோடை மழையால் தண்ணீர் நிரம்பிய மேலப்பாவூர் குளம் கடல் போல் காட்சியளிக்கிறது. இந்த குளத்தை நம்பி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பயன்பெற்று வருகின்றன. ஆனால், மேலப்பாவூர், கீழப்பாவூர் குளங்கள் போதிய பராமரிப்பின்றி தூர்ந்துள்ளன. இங்கு மருந்துக்குக்கூட பராமரிப்பு செய்யப்படாத நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை துவங்கும்போது மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து கிடைக்கப்பெறும் தண்ணீர் இக்குளத்திற்கு வந்துசேரும் என்பதால் மழை காலத்திற்கு முன்பாக குளங்களை சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக மேலப்பாவூர் குளத்தை ஆக்கிரமித்துள்ள அமலைசெடிகளை விரைவில் அகற்ற முன்வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

பொதுவாக பருவமழை பெய்தாலும் கீழப்பாவூர், மேலப்பாவூர் குளங்களை பொதுப்பணித்துறையினர் சரியான முறையில் தூர்வாரினால் மட்டுமே 110 நாள் முதல் 120 நாட்கள் வரை தண்ணீர் தேங்கி நிற்கும். பராமரிப்பின்றி காணப்படும் இக்குளம் மழையால் நிரம்பினாலும் கூட 60 முதல் 70 நாட்கள் வரை மட்டுமே தண்ணீரை தேக்கிவைக்க முடியும். மீதி நாட்களில் விவசாயம் செய்ய தண்ணீர் இல்லாமல் திண்டாடும் சூழ்நிலை ஏற்படும். எனவே, மேற்படி குளங்களை பொதுப்பணித்துறையினர் போர்க்கால அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு முறையாகத் தூர்வாரி அமலை செடிகளை அகற்றி இனிவரும் காலங்களில் கூடுதலாக தண்ணீர் தேக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் பாசன விவசாயிகள் உள்ளனர்.

Tags : Melapavoor Pond ,Amala , Pavurcattiram, farmers
× RELATED ஏஐ தொழில்நுட்பத்தால் பணிநீக்கம் செய்யக்கூடாது: ஏ.ஆர்.ரஹ்மான்