×

ஒருபுறம் நிரம்பி வழியும் மேட்டூர் அணை: ஆண்டுக்கணக்கில் வறண்டு கிடக்கும் ஆணைமடுவு அணை

வாழப்பாடி: சேலம் மேட்டூர் அணை நிரம்பி, உபரிநீர் வீணாகிக் கொண்டிருக்கும் நிலையில் மாவட்டத்திலுள்ள ஆணைமடுவு அணை வறண்டு கிடப்பது விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே உபரிநீர் கொண்டு அணையை நிரப்பும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். சேலம் மாவட்டத்தின் முக்கிய அடையாளமாக திகழும் மேட்டூர் அணையானது 13 டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கான நீராதாரமாக திகழ்கிறது. இந்த அணையானால் மாவட்ட விவசாயிகளுக்கு எந்தவிதமான பலனும் இல்லை. இந்த நிலையில் மேட்டூர் அணையிலிருந்து தினசரி லட்சக்கணக்கான லிட்டர் நீர், உபரியாக வெளியேறி வீணாக கடலில் கலந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் சேலம் கிழக்கு பாசன விவசாயிகளுக்கு நீராதாரமாக திகழும் ஆணைமடுவு அணையோ நீரின்றி வறண்டு கிடக்கிறது. ஒரு புறம் மேட்டூர் அணை உபரிநீர் வீணாகிக் கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு புறம் ஆணைமடுவு அணை வறண்டு கிடப்பது விவசாயிகள் மட்டுமன்றி, நீர்வள ஆர்வலர்கள் மத்தியிலும் பெருத்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து நீர்வள ஆர்வலர்கள் கூறியதாவது: சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த, அருநூற்றுமலை மற்றும் சந்துமலை வனப்பகுதியில், வழிந்தோடும் நீரோடைகள் சங்கமித்து வசிஷ்டநதி உற்பத்தியாகிறது. புழுதிக்குட்டை கிராமத்தில், இரு மலைக்குன்றுக்கு இடையே பாயும் அந்த நதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 234 ஏக்கர் பரப்பளவில் கடந்த 1982 ஆம் ஆண்டு ஆணைமடுவு அணை கட்டப்பட்டது. வசிஷ்ட நதி இங்கே பிறந்து ஆத்தூர் அருகே சுவேதா நதியுடன் இணைந்து வெள்ளாறு நதியாக சேலம், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள் வழியாக பரங்கிப்பேட்டை (சிதம்பரம் வடக்கு) அருகே வங்காள விரிகுடா கடலில் சேர்க்கிறது. இந்த அணையால் புழுதிக்குட்டை, குறிச்சி, கோணஞ்செட்டியூர், கணுக்கானூர், சி.என்.பாளையம், சி.பி.வலசு, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துகோம்பை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், 5,011 ஏக்கர் விளை நிலங்கள் ஆயக்கட்டு அணைப்பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக நீர்ப்பிடிப்பு பகுதியில், போதிய மழை இல்லாததால், அணைக்கு நீர் வரத்து இல்லை. இதனால் நெல், கரும்பு, மஞ்சள் பயிர்கள் பயிரிடும் பரப்பளவு குறைந்து விட்டது. பாசன நிலங்கள் தண்ணீரின்றி, தரிசாக காட்சி அளிக்கிறது.

தற்போது பலத்த மழை பெய்து வரும் நிலையிலும் அணைக்கான நீர்வரத்து முற்றிலும் சரிந்து, நீர்மட்டம் 12 அடியாக குறைந்துள்ளது. அணையின் மையப்பகுதியில் மட்டும் குட்டைபோல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. எனவே மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் உபரிநீர், வீணாக கடலில் சென்று கலப்பதை தடுக்க, சேலம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு திருப்பி விட வேண்டும். குறிப்பாக ஆண்டு முழுவதும் வறண்டு கிடக்கும் ஆணைமடுவு நீர்த்தேக்கத்திற்கு, காவிரி உபரிநீரை கொண்டு வருவதன் மூலம் சேலம் மாவட்டம் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளும் பயனடைவர். இவ்வாறு நீர்வள ஆர்வலர்கள் கூறினர்.

திட்டங்கள் பட்டியலிட்டு கொடுத்தும் பலனில்லை - பாதுகாப்பு சங்கம் ஆதங்கம்

தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் சண்முகம் கூறுகையில் ‘‘தமிழ்நாடு ஆறுகள் இணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக மேட்டூர் அணையிலிருந்து ஆண்டு தோறும் மழை காலங்களில் வீணாக கடலில் கலக்கும் நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். குறிப்பாக மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் நீரை, மதுரகாளியம்மன் அணைக்கு மேற்கு கிழக்கு பகுதியில் உள்ள 6கிலோ மீட்டர் மலைச் சரிவு மற்றும் சேலம் கந்தகிரி பைபாஸ் அருகில் உள்ள மலைப்பகுதி வழியாக மூன்று கிலோமீட்டர் தூரம் வாய்க்கால் வெட்டி மேட்டூரிலிருந்து வெலிங்டன் ஏரி வரை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி செய்தால் 190 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏற்கனவே உள்ள வாய்க்கால்களுடன் இணைப்பு ஏற்படும். சேலம் முதல் வெலிங்டன் ஏரி வரை சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் கிடைப்பதோடு, விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதற்கும் வழி ஏற்படும். இதே போல் பல்வேறு உபரிநீர் பயன்பாட்டு திட்டங்களை பட்டியலிட்டு அரசிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த பலனும் இல்லை’’ என்றார்.

Tags : Mettur Dam ,Anamaduvu Dam ,Salem , Anamaduvu Dam, Salem, Mettur Dam
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,787 கன அடியில் இருந்து 2,118 கன அடியாக குறைவு