×

ஜவ்வாதுமலை பகுதியில் கனமழை: காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 7 கறவை மாடு பலி

செங்கம்: ஜவ்வாதுமலையில் பெய்த கனமழை காரணமாக, காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 7 கறவை மாடுகள் பரிதாபமாக பலியாயின. மேலும், 70 ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையில் தவித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் மழைக்காலங்களில் பல்வேறு இடங்களில் ஊற்றெடுத்து, சிறுசிறு ஓடைகளாக, மலையடிவார கிராமங்களான ஊர் கவுண்டனூர், பன்ரேவ், கிளையூர் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக அருகில் உள்ள குப்பநத்தம் அணைக்கு சென்று நிரம்பும். இந்நிலையில் ஜவ்வாதுமலை பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து மலையடிவார கிராமங்களில் ஓடியது. இந்த வெள்ளத்தில் அங்குள்ள விளைநிலங்களுக்கு அருகில் கட்டிவைத்திருந்த மாடுகள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தன.

ஊர்கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான 6 கறவை மாடுகள், கிளையூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரது ஒரு மாடு என 7 கறவை மாடுகள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக பலியாயின. மேலும், ஊர்கவுண்டனூர், பன்ரேவ், கிளையூர் ஆகிய மலையடிவார கிராமங்களில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டிருந்த வாழை மரங்கள், நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் வெள்ளத்தில் மூழ்கி நாசமானது. இதனால் ஜவ்வாதுமலை அடிவார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வேதனையிலும், அதிர்ச்சியிலும் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். மழை வெள்ளத்தால் பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Jawaharmalai , Heavy rain
× RELATED மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் கனமழை