தண்டவாளத்தில் படுத்த கல்லூரி மாணவர் ரயில் வேகத்தை பார்த்து பயந்து ஓட்டம்

திருச்சி: எடமலைப்பட்டி புதுாரில் தற்கொலைக்காக தண்டவாளத்தில் படுத்த கல்லுாரி மாணவர் ரயிலின் வேகத்தை பார்த்ததும் பயந்து ஓட்டம் பிடிக்கும் போது தடுமாறி விழுந்ததில் 2 கால்களின் பாதம் துண்டானது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சிலையாத்தியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் மணிகண்டன் (21). தனியார் கல்லூரியில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராம்ஜிநகர் அருகே படுகையில் உள்ள மாமா ராஜேந்திரன் வீட்டிற்கு வந்தார். நேற்று அதிகாலை எ.புதூர் அரசு காலணி எதிரே உள்ள தண்டவாளத்தில் இரண்டு கால்களின் பாதங்கள் துண்டாகி ரத்தம் வழிந்தோட உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இதுகுறித்து தகவலின் பேரில் எ.புதூர் போலீசார் மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்து விசாரித்தனர். விசாரணையில், எ.புதூரில் உள்ள மாமா வீட்டிற்கு செல்வதாக கூறி வந்த மணிகண்டன், அதிகாலை 5.30 மணியளவில் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துள்ளார். அப்போது மதுரையில் இருந்து சென்னை செல்லும் ரயிலின் வேகத்தை பார்த்து பயந்து எழுந்து ஓட முயன்றுள்ளார். அப்போது அவர் தடுமாறி விழுந்ததில் ரயில் சக்கரம் ஏறி 2 கால்களின் பாதங்கள் துண்டானது தெரிய வந்தது. இது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து தற்கொலை முயற்சிக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : College student , College student, flow
× RELATED கல்லூரி மாணவியை கடத்தியவர் கைது