×

கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டிய நிலையில் இரவோடு இரவாக மடைகளை இடித்த பொதுப்பணித்துறை

வீரவநல்லூர்: கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டிய வேளையில் பொதுப்பணித்துறையினர் மராமத்து செய்யப்போவதாக கூறி இரவோடு இரவாக மடைகளை ஜேசிபி மூலம் இடித்தனர். இதனால் விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர். பாபநாசம் அணையில் இருந்து கன்னடியன் கால்வாயில் ஆண்டுதோறும் பாசனத்திற்காக ஜூன் 1ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்தாண்டு அணையில் போதிய நீர் இருப்பு இருந்தும் அதிகாரிகள் கால்வாயில் தண்ணீர் திறக்கவில்லை. இதையடுத்து கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி கடந்த ஜூலை 23ல் கன்னடியன் கால்வாய் விவசாய சங்கத்தினர் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் ஆகாஷிடம் மனு அளித்தனர். மறுநாள் மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷிடமும் மனு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து தண்ணீர் திறப்பது தொடர்பாக ஆக.7ம் தேதி விவசாயிகள் சேரன்மகாதேவியில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்தின் முடிவில் விவசாயிகள் அரை நிர்வாண கோலத்தில் ஊர்வலமாக சென்று சப்-கலெக்டரிடம் மீண்டும் மனு அளித்தனர். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒரு வாரத்திற்குள் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். இந்நிலையில் ஒரு வாரம் கடந்தும், கால்வாயில் தண்ணீர் திறப்பது தொடர்பாக அதிகாரிகள் முடிவு எடுக்காததால் ஆக.12ம் தேதி சேரன்மகாதேவியில் விவசாயிகள் அவசர கூட்டம் நடத்தி கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி சாலை மறியல் நடத்தப்படுமென முடிவு எடுத்தனர். தொடர்ந்து ஆக.17ல் சாலை மறியல் நடைபெறுமென கோபாலசமுத்திரம் முதல் கல்லிடைக்குறிச்சி வரை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

இதுதொடர்பாக சேரன்மகாதேவி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடத்தப்பட்டு ஆக.21ல் கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனையேற்று விவசாயிகள், சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து ஆக.21ல் கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் நிலங்களை நாற்று நடும் பணிக்காக உழுது தயார்படுத்தினர். கடந்த செப்.9ம் தேதி கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. அணையில் தேவைக்கு அதிகமாக நீர் இருப்பதால் கால்வாயில் மீண்டும் திறக்க வேண்டுமென விவசாயிகள் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் கன்னடியன் கால்வாய், நதியுண்ணி கால்வாய், வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய் உள்ளிட்ட கால்வாயில் மேலும் 20 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி கன்னடின் கால்வாயை தவிர அனைத்து கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மிளகு பிள்ளையார் கோயில் பின்புறமுள்ள மடையை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கினர். தொடர்ந்து இதனை அடுத்துள்ள இரு மடைகளையும் உடைத்து புதிதாக மடை கட்டப்போவதாக தெரிவித்தனர். 6 மாதங்களாக கால்வாயில் தண்ணீர் இல்லாதபோது செய்ய வேண்டிய பணிகளை கால்வாயில் தண்ணீர் வரும் வேளையில் செய்வதை கண்டு விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

வாழைகளை காக்க போராட்டம்

சேரன்மகாதேவியை சேர்ந்த விவசாயி பேச்சித்துரை கூறுகையில், கால்வாய் தண்ணீர் இல்லாமல் வாழை பயிர்களை காக்க இரவு முழுவதும் வயலில் காவல் காத்து அருகிலுள்ள நீர்நிலைகளில் இருந்து மோட்டார் மூலம் பெரும் பொருட்செலவில் தண்ணீர் பாய்ச்சி வந்தோம். இந்நிலையில் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதால் நெல் பயிரிட ஆரம்ப பணிகளை மேற்கொண்டுள்ளோம். ஆனால் கடந்த 6 மாதமாக செய்யப்படாத மராமத்து பணிகளை அதிகாரிகள் தண்ணீர் திறப்பதை தவிர்க்க தற்போது செய்வது ஏழை விவசாயிகள் வயிற்றில் அடிப்பதுபோல் உள்ளது என்றார்.

Tags : Public Works Department ,canal ,Canadian , Public Works Department, Water
× RELATED பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள...