×

செப்டம்பர் 20ம் தேதி அன்னை தமிழ் காக்க அணிவகுப்போம்: மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: செப்டம்பர் 20ம் தேதி அன்னை தமிழை காக்க அனைவரும் அணிவகுப்போம் என்று மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.கடிதத்தில் கூறியுள்ளதாவது: செப்டம்பர் 17 நமக்கு இரட்டிப்பு பெருமைமிக்க நாள். தந்தை பெரியாரின் பிறந்தநாள். திமுக எனும் சீர்திருத்தப் பேரியக்கத்தை அண்ணா தொடங்கிய நாள். இந்தியாவின் அடையாளமாக ஒரு மொழிதான் இருக்க வேண்டும். இந்திதான் அந்த  அடையாளத்தைக் கொடுக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் பேசியிருப்பது, இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கக் கூடியது. இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஊறுவிளைவிக்கும் இந்தக் கொள்கைகளை முளையிலேயே கிள்ளி  எறிந்திட வேண்டும். அதனால்தான், உயர்நிலை செயல்த்திட்டக் கூட்டத்தில், மத்திய அரசின் இந்தித் திணிப்பையும் ஒரே தேசம் - ஒரே மொழி - ஒரே ரேஷன் ஆகியவற்றை எதிர்த்தும் தமிழ்நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவதெனத்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் வருவாய் மாவட்டத் தலைநகரங்கள் அனைத்திலும் செப்டம்பர் 20ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.

மாவட்டக் கழக  நிர்வாகிகள், உடன்பிறப்புகளும் திரளாகப் பங்கேற்பதுடன், இது தமிழ் காக்கும் போராட்டம் என்பதால் தங்கள் பகுதியில் உள்ள உணர்வுமிக்க தமிழர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்திட வேண்டும்.  இளைஞர்கள் மாணவர்கள் மகளிர் -  ஆன்மிகச் சிந்தனை கொண்டோர் - பொதுநல அக்கறையுடையோர் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் மக்கள் எழுச்சியாக அமையவேண்டும்.தமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான், யாருக்கும் தாழவும் மாட்டான் என்பதை மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு உணர்த்தும் வகையில் அணிவகுப்போம். இந்தி ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்த நம்மை அர்ப்பணிப்போம். அய்யா பெரியார் -  பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் வழியில் அன்னைத் தமிழைக் காத்திடுவோம்.வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.தமிழன் யாரையும் தாழ்த்தவும்மாட்டான்,யாருக்கும் தாழவும் மாட்டான் என்பதை மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு உணர்த்துவோம்.

Tags : MK Stalin ,defendant , Let , march ,defend, Tamil, MK Stalin, statement
× RELATED 'பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின்...