×

நர்மதை ஆற்றில் மலர் தூவி ஆரத்தி எடுத்து குஜராத்தில் 69வது பிறந்தநாளை கொண்டாடினார் பிரதமர் மோடி: பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து

கேவதியா: பிரதமர் நரேந்திர மோடி தனது 69வது பிறந்தநாளை சொந்த ஊரான குஜராத்தில் நேற்று கொண்டாடினார். சர்தார் சரோவர் அணையில் இருந்து நர்மதை ஆற்றில் மலர் தூவி ஆரத்தி எடுத்து வழிபட்டார். அவருக்கு பல்வேறு  கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.கடந்த 1950ம் ஆண்டு குஜராத்தின் வத்நகரில் பிறந்தவரான பிரதமர் மோடி நேற்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாளில் நாள் முழுவதும் அவர் தனது சொந்த மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஏற்பாடுகள்  செய்யப்பட்டிருந்தன. அதன்படி, நேற்று முன்தினம் அகமதாபாத் சென்ற பிரதமர் மோடி, நேற்று காலை நர்மதா மாவட்டத்தில் உள்ள கேவதியாவுக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.அங்குள்ள, உலகின் மிக உயரமான ஒற்றுமையின் சிலையான சர்தார் வல்லபாய் படேல் சிலையை ஹெலிகாப்டரில் இருந்தபடி வீடியோ எடுத்து அதை தனது டிவிட்டரில் பதிவிட்டார். பின்னர், சர்தார் சரோவர் அணைக்கு சென்ற அவர், நர்மதை  ஆற்றில் மாநில அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூஜையில் பங்கேற்றார். சர்தார் சரோவர் அணை கடந்த 2017ல் உயரம் அதிகரிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக அதன் முழு கொள்ளவான 138.68 மீட்டருக்கு நீர் நிரம்பி உள்ளது.  இதையொட்டி, ‘நமாமி நர்மதா’ விழாவை மாநில அரசு கொண்டாடுகிறது.

இவ்விழாவை தொடங்கி வைத்த மோடி, நர்மதை ஆற்றில் மலர் தூவி ஆரத்தி எடுத்து வழிபட்டார். அவருடன் மாநில முதல்வர் விஜய் ரூபானியும் பூஜையில் பங்கேற்றார். அங்கிருந்து சர்தார் படேல் சிலையையொட்டி நடக்கும் பல்வேறு  வளர்ச்சிப் பணிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். குருதேஸ்வர் கிராமத்திற்கு அருகே உள்ள தத் கோயிலில் நடந்த சிறப்பு பிரார்த்தனையிலும் மோடி பங்கேற்றார்.கேவதியாவில் உள்ள பட்டாம்பூச்சி பூங்கா சென்ற அவர், காவி நிற பிளைன் டைகர் பட்டாம்பூச்சியை மாநில பட்டாம்பூச்சியாக பெயர் சூட்டினார். இதைத்தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:காஷ்மீர் விவகாரத்தில் சர்தார் படேலின் உத்வேகத்தினால் நம் நாடு மிக முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம், பல ஆண்டு பிரச்னைக்கு தீர்வு காண புதிய பாதையில் நடைபோடுகிறது. செப்டம்பர் 17ம் தேதி ஐதராபாத் சுதந்திர தினம்  கொண்டாடப்படுவதற்கு காரணம் சர்தார் படேலின் தைரியமான முடிவுதான்.  நாடு சுதந்திரம் அடைந்ததும், ஐதராபாத்தில் ஆட்சி செய்து வந்த கடைசி நிஜாம் 7ம் உஸ்மான் அலி கான் ஆசப் ஜா அம்மாநிலத்தை தனி நாடாக அறிவித்தார். அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் படேல், ஐதராபாத் இந்தியாவுடன்  இணைக்குமாறு  கோரிக்கை விடுத்தார். அதற்கு நிஜாம் மறுத்தார். இதனால், ஆபரேஷன் போலோ நடவடிக்கை மூலம் ஆயுதப் படை மூலமாக ஐதராபாத் மாநிலம் மீட்கப்பட்டு இந்தியாவின் ஒருங்கிணைக்கப்பட்டது.

தற்போது அவரது முழு உருவ சிலை காண வரும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சி தருகிறது. 133 ஆண்டு பழமையான அமெரிக்காவின் சுதந்திரா தேவி சிலையை நாளொன்றுக்கு சராசரியாக 10,000 பேர் பார்க்கின்றனர். 11 மாதங்களே ஆன படேல் சிலை நாளொன்றுக்கு சராசரியாக 8,500 பேர் பார்க்கின்றனர். சர்தார் சரோவர் திட்டத்தை  வெற்றியாக்க உதவிய லட்சக்கணக்கான மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறினார்.பிறந்தநாளையொட்டி, பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும், பல்வேறு மாநில முதல்வர்களும், தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தாயிடம் ஆசி பெற்றார்
காந்தி நகரில் உள்ள தனது சகோதரர் வீட்டுக்கு நேற்று காலை சென்ற பிரதமர் மோடி, தனது தாயிடம் ஆசி பெற்றார். அவரது தாய் ஹீராபென் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மேலும், தனது தாயுடன் சேர்ந்து மதிய உணவு  சாப்பிட்டார் மோடி.

முன்பே நிரம்பிய நர்மதை அணை
பிரதமர் மோடி தனது பிறந்தநாளன்று நர்மதை ஆற்றில் பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக நேற்று முன்தினம்தான் அந்த அணை முழு கொள்ளவை எட்டியதாக கணக்கு காட்டப்பட்டுள்ளதாக மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் பால  பச்சன் கூறி உள்ளார். ‘‘சுமார் ஒரு மாதத்துக்கு முன்பே அணை நிரம்பிவிட்டது. ஆனால், அணை திறக்காமல் வைத்திருந்ததால் ம.பி. பாதிக்கப்பட்டது’’ என்றார்.

வாங்கி கட்டிக்கொள்ளும் பாக். அமைச்சர்
பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு உள்நாட்டு தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில், பாகிஸ்தான் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் உசேன் சவுத்ரி, சர்ச்சைக்குரிய வாசகங்களுடன் டிவீட்டை  வெளியிட்டு, நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டு வருகிறார். பவாத் உசேன் சவுத்ரி நேற்று வெளியிட்ட டிவீட்டில், ‘‘கருத்தடை முக்கியத்துவத்தை இந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது’’ என்று கூறியுள்ளார். மேலும், மோடி பர்த்டே  ஹேஷ்டேக்கையும் அவர் இத்துடன் இணைத்துள்ளார். அதாவது பவாத் வெளியிட்ட டிவீட்டின் உள்ளார்த்தம், ‘‘மோடி பிறந்திருக்கக்கூடாது’’ என்பதுதான். இதை புரிந்து கொண்ட இணையதள ஆர்வலர்கள், அவரது டிவீட்டின் கீழ் பவாத்தை  கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சோனியா, ராகுல் வாழ்த்து
பிரதமர் மோடிக்கு சோனியா, ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‘காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை  தெரிவித்துள்ளார். அவர் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் நீண்ட நாள் வாழ வாழ்த்தியுள்ளார்,’ என கூறப்பட்டுள்ளது. ராகுல் தனது டிவிட்டரில், ‘69வது பிறந்தநாளை கொண்டாடும் மோடிக்கு எனது வாழ்த்துக்கள். எப்போதும்  மகிழ்ச்சியுடனும், நல்ல ஆரோக்கியத்துடன் வாழ கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்,’ என கூறி உள்ளார்.

Tags : Gujarat ,Modi ,birthday , flowers, river , humor, Prime Minister Modi,birthday , Gujarat
× RELATED சி.எஸ்.கே – குஜராத் அணிகள் மோதும் போட்டி: டிக்கெட் விற்பனை தொடக்கம்