×

அரசு பிடியில் இருந்து கோயில்களை விடுவிக்க வழக்கு : நவம்பர் முதல் வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு

புதுடெல்லி: இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் வரும் நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்து நேற்று உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருந்து தமிழகம், புதுவை, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருக்கும் கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க கோரி கோவையை சேர்ந்த தயானந்த சரஸ்வதி, குஜராத்தை சேர்ந்த பரமானந்த சரஸ்வதி, அதேப்போல் மும்பையை சேர்ந்த விஸ்வேஷ்வரானந்த் ஆகிய சாமியார்கள் கடந்த 2012ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த நிலையில் நீண்ட ஆண்டு இடைவெளிக்கு பிறகு மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் நீதிபதி முன்னிலையில் ஒரு கோரிக்கை வைத்தார். அதில்,”இந்து அமைப்பு சார்பாக தான் தற்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்று வரும் அயோத்தியா வழக்கில் வாதிட்டு வருவதால் வழக்கை வேறு ஒரு தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதையடுத்து உத்தரவில்,” இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை நவம்பர் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்து நேற்று உத்தரவிட்டனர். இதில் குறிப்பாக தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் மட்டும் 36ஆயிரத்து 488 கோயில்கள், 56 திருமடங்கள் மற்றும் மடங்களுடன்  இணைந்த 58 கோயில்கள் ஆகியவை உள்ளது. அதேபோல் மேற்கண்ட கோயில்களுக்கு சொந்தமான சொத்தாக 4லட்சத்து 78ஆயிரத்து 347 ஏக்கர் நிலம் உள்ளது என்பது கூடுதல் தகவல்.

Tags : release ,Supreme Court , Case for release,temples from state clutches
× RELATED தமிழகத்தில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு...