×

வேட்பு மனு ஏற்கப்பட்ட பிறகு தேர்தல் வழக்குதான் தாக்கல் செய்ய முடியும் : ஐகோர்ட்டில் ஆணையம் வாதம்

சென்னை: தேர்தல் அதிகாரி வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டால் அதை எதிர்த்து தேர்தல் வழக்கு தொடர முடியுமே தவிர பொதுநல வழக்குதொடர முடியாது என்று ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார்,  கொமதேக சின்னராஜ்,  மதிமுக கணேசமூர்த்தி மற்றும் ஐ.ஜே.கே பாரிவேந்தர் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இந்நிலையில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற 4 பேரின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், தேர்தல் விதிகளின் படி ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ள ஒருவர், அந்த கட்சியிலிருந்து விலகாமல் மற்றொரு கட்சியின்  சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதமானது  எனவும், இதுசம்பந்தமாக தேர்தல் அதிகாரிக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய  அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.  அப்போது, கட்சியின் உறுப்பினராக இல்லாத ஒருவரை அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதி அளித்தது தேர்தல் நடைமுறைகளுக்கு முரணானதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், தேர்தலில், கட்சியின் பெயர், தேர்தல் அறிக்கையை விட,  சின்னமே பெரும்பங்காற்றுகிறது  என்றும் சின்னத்தை வைத்து தான் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல் நிரஞ்சன், ஒரு கட்சியை சேர்ந்த ஒருவர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என்ற விதி இருந்தாலும், தேர்தல் அதிகாரி வேட்பு மனுவை ஏற்று கொண்டால் அதை எதிர்த்து தேர்தல் வழக்கு தான் தொடர முடியும். எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று தெரிவித்தார்.  வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம், திமுக, அதிமுக மற்றும் அக்கட்சி சின்னங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்பிகள் நவம்பர் 12ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.

Tags : The Commission ,election , Nomination is accepted, only the election can be filed
× RELATED கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் திமுக கிளை தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல்