ராஜஸ்தானில் கூண்டோடு கட்சித் தாவல் 6 பகுஜன் எம்எல்ஏ.க்கள் காங்கிரசில் இணைந்தனர்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் 6 பேர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகின்றது. முதல்வராக அசோக் கெலாட் இருந்து வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 200 சட்டமன்ற தொகுதிகளில் 100 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் வெளியில் இருந்து அரசுக்கு ஆதரவு அளித்து வந்தனர். மேலும் 13 சுயேட்சை எம்எல்ஏக்களில் 12 பேர் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். எம்எல்ஏக்கள் ராஜேந்திர சிங் கவுதா, ஜோகிந்தர சிங், பாஜீப் அலி, லக்கா சிங் மீனா, சந்தீப் யாதவ், தீப்சந்த் ஆகியோர் சட்டப்பேரவை சபாநாயகர் ஜோசியை நேற்று முன்தினம் இரவு சந்தித்து காங்கிரசில் இணையும் தனது முடிவு குறித்து கடிதம் அளித்தனர்.

இது குறித்து எம்எல்ஏ ஜோகிந்தர சிங் கூறுகையில், “மாநிலத்தின் மீது அக்கறை கொண்டு அரசை வலுப்படுத்தும் நோக்கத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த அனைத்து எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவு செய்தோம்.  நாங்கள் முதலில் முதல்வரை சந்தித்ேதாம். பின்னர், சபாநாயகரிடம் எங்கள் முடிவை தெரியப்படுத்தி உள்ளோம்,” என்றார். இந்நிலையில், தனது கட்சியை சேர்ந்த எம்எல்ஏ.க்கள் காங்கிரஸ் கட்சிக்கு தாவியதை அடுத்து மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசானது பகுஜன் சமாஜ் எம்எல்ஏகளை உடைத்துவிட்டது. காங்கிரஸ் கட்சி நம்பமுடியாத மற்றும் நம்பதகாத கட்சி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது,” என்று பதிவிட்டுள்ளார்.


Tags : Rajasthan ,Congress ,party ,Koodudu Party ,BJP , BJP MLAs join Congress , Rajasthan
× RELATED குழந்தைகள் பலி 107 ஆக உயர்வு...