புதுடெல்லி: சபாநாயகர் பிறப்பித்த தகுதி நீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி கர்நாடகா மாநில அதிருப்தி எம்.எல்ஏ.க்கள் 17 பேர் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து, உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.சந்தான கவுடர் நேற்று திடீரென விலகினார்.கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சியின்போது சட்டமன்ற கொறாடா பிறப்பித்த உத்தரவை மீறியதால் இரு கட்சிகளையும் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 17 பேரை தகுதி நீக்கம் செய்து, அப்போதைய சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து, இந்த 17 எம்எல்ஏ.க்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, அஜய் ரஸ்தோகி மற்றும் எம்.சந்தான கவுடர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கில் வாதம் தொடங்க இருந்த நிலையில் திடீரென குறுக்கிட்ட நீதிபதி சந்தான கவுடர், ‘‘நான் கர்நாடகாவை சேர்ந்தவன். அதனால், நான் இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. அதனால், இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகி கொள்கிறேன்,’’ என அறிவித்தார். மேலும், அதற்கான கடிதத்தை மூத்த நீதிபதியான என்.வி.ரமணாவிடமும் ஒப்படைத்தார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நீதிபதி சந்தான கவுடர் விலகியதை தொடர்ந்து, அவருக்கு மாற்றாக அடுத்த ஓரிரு நாட்களில் புதிய நீதிபதி நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.