×

ஓபிசி.களை எஸ்சி பட்டியலில் சேர்க்க முயற்சி உ.பி. அரசின் நடவடிக்கை சுயநல அரசியல் நோக்கம் : மாயாவதி கருத்து

லக்னோ: 17 பிற்படுத்தப்பட்ட பிரிவை (ஓபிசி) சேர்ந்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கும் உத்தரப் பிரதேச அரசின் நடவடிக்கை சுயநல அரசியல் நோக்கம் கொண்டது என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 17 பிரிவினரை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்கு கடந்த ஜூனில் மாநில அரசு உத்தரவிட்டது. அரசின் நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 3 வாரத்தில் அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளதோடு, அரசின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இந்நிலையில், 17 ஓபிசி பிரிவினரை எஸ்சி பட்டியலில் சேர்க்கும் மாநில அரசின் நடவடிக்கைகளை பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.

இது குறித்து மாயாவதி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ உத்தரப்பிரதேசத்தில் 17 ஓபிசி பிரிவினரை எஸ்சி பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்டதன் மூலம் தானாகவே வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முழுவதுமாக சுயநல அரசியல் நோக்கங்கள் காரணமாக வழிநடத்தப்படும் இது போன்ற முடிவுகள் எந்த கட்சி அல்லது அரசாங்கத்தை பாதிக்காது. ஆனால் ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்படும். இது மிகவும் துரதிஷ்டவசமானது” என்று இந்தியில் பதிவிட்டுள்ளார்.

Tags : SC ,Mayawati ,Government ,SC list state action , OBCs to the SC list, State action ,selfish political motive
× RELATED மாயாவதி கட்சி எம்பி திடீர் நீக்கம்