×

தென்காசி மாவட்டம் பிரிப்பு விவகாரம் மக்கள் கருத்தை கேட்டே இறுதி முடிவு : அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தென்காசி மாவட்டத்துடன் இணைக்கும் பகுதிகள் தொடர்பாக பொதுமக்களின் கருத்தை கேட்ட பிறகே இறுதி முடிவெடுக்க அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்த பொன்னுத்துரை (எ) ராஜதுரை ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு, புதிய மாவட்டத்தை உருவாக்குவதற்கான அறிவிப்பு கடந்த ஜூலை 18ல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி அருண்சுந்தர் தயாளன் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆக. 17ல் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்கவில்லை. குறிப்பிட்ட அரசியல் கட்சியினர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். குற்றாலத்தில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்திலும் பொதுமக்கள் பங்கேற்கவில்லை.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஒரு மாவட்டத்தை இரண்டாக பிரிக்கும் போது, பொதுமக்களின் நலனைத்தான் முன்னிறுத்த வேண்டும். ஆலங்குளம் உள்ளிட்ட பல பகுதிகளின் கருத்துக்களையும், நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த பாப்பாகுடி, முக்கூடல், ரெட்டியபட்டி உள்ளிட்ட  பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், நெல்லையுடனே அதிக தொடர்பை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக, மாணவர்கள் தங்களின் கல்விக்காக நெல்லைக்கு தான் செல்கின்றனர். விவசாயிகள் தங்களது வணிகத்தொடர்பை நெல்லையுடனேயே வைத்துள்ளனர்.
ஆலங்குளம் பகுதியில் இருந்து ெதன்காசி செல்வதற்கு போதுமான வாகன வசதி இல்லை. பயணத்தூரமும் அதிகம். நெல்லை மாவட்டத்தில் 32 கல்லூரிகள் உள்ளன. தென்காசியில் 2 கல்லூரிகள் தான் உள்ளன. இதேபோல் சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ளவர்களுக்கு நெல்லைதான் அருகில் உள்ளது. இந்தப் பகுதியை தென்காசியுடன் சேர்த்தால் பெரும் அலைச்சல் ஏற்படும். எனவே, தென்காசி மாவட்டம் அமைப்பதற்கு முன்னதாக ஆலங்குளம் மற்றும் சங்கரன்கோவில் பகுதி மக்களின் கருத்தை கேட்ட பிறகே, பிரிப்பது குறித்து இறுதி முடிவெடுக்க வேண்டுமெனவும், பொதுமக்களின் கருத்தை கேட்காமல் புதிய மாவட்டம் அமைக்கக் கூடாது எனவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘எதன் அடிப்படையில் தென்காசி மாவட்டம் உருவாக்கப்படுகிறது? குற்றாலத்தில் சுற்றுலாவைத் தவிர பெரிதாக ஒன்றும் இல்லையே? எப்படி வளர்ச்சியை ஏற்படுத்துவது’’ என்றனர். அரசு தரப்பில், ‘‘தற்போது பொதுமக்களின் கருத்து கேட்கும் கூட்டங்கள் நடந்து வருகிறது. இதன்பிறகே தென்காசி மாவட்டத்தில் சேர்க்கும் பகுதிகள் குறித்து இறுதி முடிவெடுக்கப்படும்’’ என கூறப்பட்டது. இதையடுத்து, ‘‘தென்காசி மாவட்டம் உருவாக்கத்தில் சேர்க்கப்படும் பகுதிகள் குறித்து மக்கள் கருத்தை கேட்ட பிறகே இறுதி முடிவெடுக்க வேண்டும்’’ என நீதிபதிகள் உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.

சங்கரன்கோவிலில் கடையடைப்பு: 5 ஆயிரம் விசைத்தறிகள் நிறுத்தம்

வறட்சி பகுதியான சங்கரன்கோவில், திருவேங்கடம் மற்றும் வீ.கே.புதூர், சிவகிரி தாலுகாக்களை இணைத்து சங்கரன்கோவிலை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வலியுறுத்தி நேற்று வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது. இதையொட்டி சங்கரன்கோவில், திருவேங்கடம் பகுதிகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோக்கள் இயங்கவில்லை. ேமலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் இயங்கவில்லை. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கானோர் சங்கரன்கோவில் சுவாமி சன்னதி முன் திரண்டு பேரணியாக சென்று சங்கரன்கோவில் தாசில்தார் ஆதிநாராயணனிடம் மனு அளித்தனர். அடுத்தகட்டமாக மாவட்ட கலெக்டரிடமும் அதன்பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து மனு அளிக்கவும் இருப்பதாக சங்கரன்கோவில் மாவட்ட கோரிக்கை இயக்கத்தினர் தெரிவித்தனர்.

Tags : Tenkasi , Tenkasi district separation issue, final decision of the people
× RELATED தென்காசி மாவட்டம் மைப்பாறை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து