×

பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லாததால் கன்டெய்னர் லாரிகள் ஸ்டிரைக் தொடரும் : உரிமையாளர்கள் அறிவிப்பால் பலகோடி சரக்குகள் வீணாகும் சூழல்

சென்னை: பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கன்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என அறிவித்துள்னர். சென்னை துறைமுகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் சரக்குகள் கொண்டு வரப்படுகிறது. இந்த சரக்குகள் கன்டெய்னர் லாரிகளில் ஏற்றி வெளியூர், வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த பணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இதற்கு கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், கடந்த 15ம் தேதி நள்ளிரவு முதல் 5000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகள் இயக்காமல் காசிமேடு ஜீரோ கேட் முன்பு லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் என 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2வது நாளாக நேற்றும் இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தது. இதனால் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவேண்டிய சரக்குகள் தேக்கம் அடைந்தது. இதனால் உணவு பொருட்கள் கெட்டு போகும் நிலைமை ஏற்பட்டது. பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

இதனிடையே தண்டையார்பேட்டை ரெட்டக்குழி தெருவில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் லட்சுமி, ராயபுரம் உதவி கமிஷனர் தினகரன் மற்றும் சிஎப்எஸ் நிர்வாகத்தினர், கன்டெய்னர் லாரி உரிமையாளர்களிடம் ேபச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் வேலைநிறுத்தம் தொடரும் என கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர். மேலும், கோரிக்கைகளை நிறைவேற்ற தொடர்புடைய துறைமுக அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் குற்றச்சாட்டினர். கன்டெய்னர் லாரி வேலை நிறுத்தம் நேற்று 2வது நாளாக நீடித்ததால் சென்னை துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பல கோடி மதிப்புள்ள சரக்குகள் வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தாசில்தார் தலைமையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று மாலை ராயபுரத்தில் நடைபெற்றது. இதில் வாடகை கட்டணம் மற்றும் ஒரு லாரியில் ஒரு கன்டெய்னர் மட்டுமே ஏற்றவோம் என்ற வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக அதிகாரிகள் யாரேனும் பேச்சு வார்த்தைக்கு அழைத்தால் 20 அடி கன்டெய்னருக்கு 40 அடி கன்டெய்னர் வாடகை கொடுக்க வேண்டும். 40 அடி கன்டெய்னருக்கு ₹1000 கூடுதலாக வாடகை கொடுக்க வேண்டும். காலியான கன்டெய்னருக்கு 3500 வாடகை கொடுக்க வேண்டும். ஒரு லாரியில் ஒரு கன்டெய்னர் மட்டுமே ஏற்ற நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படும் என கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.

Tags : owners , Container trucks ,continue to strike , lack of agreement
× RELATED சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தில் ஆய்வகம், பயிற்சி மையம் திறப்பு