×

சிட்லப்பாக்கத்தில் சேதமடைந்த மின்கம்பம் விழுந்து விபத்து மின்சாரம் பாய்ந்து வியாபாரி பலி : தெரு நாய்களுக்கு உணவு வைத்தபோது சோகம்

சென்னை: சிட்லப்பாக்கத்தில், தெருநாய்களுக்கு உணவு வைத்தபோது சேதம் அடைந்த மின்கம்பம் முறிந்து விழுந்ததால் மின்சாரம் பாய்ந்து வேன் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை சிட்லப்பாக்கம், முத்துலட்சுமி நகர், சாரங்கன் அவென்யூ கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்தவர் சேதுராஜ் (42). மினி வேன் வைத்து தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி சங்கரி. தம்பதிக்கு கனகதுர்கா என்ற மகள் மற்றும் ஹரிஹரநாதன் என்ற மகன் உள்ளனர். சேதுராஜ் தினமும் இரவு நேரத்தில் வீட்டின் அருகே சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு உணவு வைப்பது வழக்கம். இதன்படி நேற்று முன்தினம் இரவு சேதுராஜ் வீட்டுக்கு வந்த பிறகு தெரு நாய்களுக்கு உணவு வைத்துள்ளார். அப்போது அப்பகுதியில் சேதம் அடைந்த மின் கம்பம் திடீரென முறிந்து விழுந்தது. இதில், சேதுராஜ் மீது மின் கம்பி விழுந்ததில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சிட்லப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து சேதுராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘சிட்லப்பாக்கம் பகுதியில் பல ஆண்டுகளாக மின் கம்பங்கள் சேதமடைந்த நிலையில்தான் உள்ளன. பழுதடைந்த கம்பங்களை அகற்றிவிட்டு புதிய கம்பங்களை அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தோம். ஆனால் மின்
வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சேதுராஜ் உயிரிழப்புக்கு மின்வாரியத்தின் அலட்சியமே காரணம். மேலும் உயிர்பலி ஏற்படாமல் இருக்க சேதமடைந்த மின்கம்பங்களை உடனடியாக அகற்றிவிட்டு, புதிய மின் கம்பங்களை அமைக்க வேண்டும். இறந்துபோன சேதுராஜ் குடும்பத்திற்கு, தமிழக அரசு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும்’’ என்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக முகலிவாக்கத்தில் பூமிக்கு அடியில் சரிவர மின்கம்பி புதைக்கப்படாததால், தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து, 9ம் வகுப்பு மாணவன் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

108 ஆம்புலன்ஸ் சேவை மையம் அலட்சிய பதில்: வைரலாக பரவும் ஆடியோ

சேதுராஜ் குடும்பத்தினர் மின் விபத்து ஏற்பட்டதும் அவரை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் உடனே சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, சேதுராஜின் மனைவி சங்கரி 108 ஆம்புலன்ஸ் சேவை மையம் எண்ணை தொடர்பு கொண்டு உதவி கேட்டபோது, எதிர்முனையில் பேசிய பெண் அதிகாரி தனியார் மருத்துவமனைக்கு வர முடியாது என்று மறுத்து கூறியுள்ளார். இந்த ஆடியோ தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவது பல்வேறு தரப்பினரை அதிர்ச்சிக்கு அடைய செய்துள்ளது. அதன் விவரம்:

சங்கரி: அம்மா, நமஸ்தே அம்மா. சிட்லப்பாக்கத்தில் (தனியார்) மருத்துவமனையில இருந்து பேசுறேன். என் வீட்டுக்காரரை ஜி.எச் கொண்டு போகணும். கொஞ்சம் வர முடியுமா?
பெண் அதிகாரி: என்னாச்சு.. என்னாச்சு?
சங்கரி: அவருக்கு கரண்ட் அடிச்சிருச்சும்மா. ஷாக் அடிச்சுருச்சும்மா. பிளீஸ்மா. கொஞ்சம் சீக்கிரம் அனுப்புங்கம்மா.
பெண் அதிகாரி: அம்மா பிரைவேட்டுக்கு வண்டி வர மாட்டாங்கம்மா. தனியார் காரைதான் நீங்க பார்க்கணும்.
சங்கரி: (உறவினர்களுடன்) அவங்க வரமாட்டாங்களாம்....தனியார் காரை தான் பார்க்கணுமாம்...
இவ்வாறு அந்த உரையாடல் முடிகிறது.
உயிருக்கு போராடும் தனது கணவரை காப்பாற்ற 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்திடம் உதவி கேட்ட பெண்ணிடம் அனுப்ப முடியாது என்று அலட்சியமாக பதில் சொன்ன 108 ஆம்புலன்ஸ் சேவை மைய பெண் அதிகாரியின் செயல் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சடலத்துடன் மின்நிலையம் முற்றுகை

மின்கம்பம்  முறிந்து விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த சேதுராஜின் உடல் நேற்று மதியம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்தது. பின்னர் அவரது உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர். அப்போது, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சேதுராஜின் உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து சிட்லபாக்கம் முதல் பிரதான சாலை வழியாக சேதுராஜின் வீட்டிற்கு  கொண்டுசென்றனர். அந்த சாலையில் சிட்லப்பாக்கம் காவல் நிலையம்  அருகில் உள்ள துணை மின் நிலைய வளாகத்தில் திடீரென சடலத்துடன் நுழைந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சேதுராஜின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லை என்றால் உடலை இங்கிருந்து எடுக்க மாட்டோம்  என கூறி கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி  பரபரப்பானது.

தகவல் அறிந்து வந்த சேலையூர் காவல் உதவி ஆணையர்  சகாதேவன் மற்றும் சேலையூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுந்தரமூர்த்தி  தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்தை நடத்தினார்கள். மின்வாரிய விதிகளுக்கு  உட்பட்டு இந்த சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அலுவலக  வளாகத்தில் இருந்து உடலை கொண்டு செல்லும்படி மின்வாரிய அதிகாரிகள்  பொதுமக்களிடம் நீண்டநேரம் கெஞ்சினர். பிறகு பொதுமக்கள் அங்கிருந்து உடலை  கொண்டு சென்றனர்.

Tags : accident ,Sitlapakkam Dealer , Damaged at Sitlapakkam ,Dealer dies after accident
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...