×

பல கட்சி ஜனநாயகம் தோற்று விட்டது என்று புதிய சர்ச்சை அமித்ஷாவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

* அதிபர் ஆட்சி முறை கொண்டு வர திட்டம் என குற்றச்சாட்டு

புதுடெல்லி: இந்தியாவில் பல கட்சி ஜனநாயகம் தோல்வி அடைந்து விட்டதாக மத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷா புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். இதற்கு  பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதிபர் ஆட்சி முறையை  கொண்டு வர முயற்சிப்பதாக குற்றம்சாட்டி உள்ளன. மத்திய உள்துறை  அமைச்சரும், பாஜ தேசிய தலைவருமான அமித் ஷா, கடந்த சில நாட்களாக  சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகிறார். இருதினங்களுக்கு முன் பேசிய  அவர், ‘இந்தியை இந்தியாவின் ஒரே அடையாள மொழியாக்க வேண்டும்,’ என்று  கூறினார். இதற்கு நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பு குரல் இன்னும்  அடங்கவில்லை. அதற்குள் நேற்று அவர், மற்றொரு சர்ச்சைக்குரிய கருத்தை கூறி  பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். டெல்லியில் அனைத்து இந்திய மேலாண்மை  கழகத்தின் தரப்பில்  நேற்று நடந்த நிகழ்ச்சியில் அமித் ஷா கலந்து   கொண்டார். அதில், அவர் பேசியதாவது:

ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுகிறது.   காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 43 நாட்கள் கடந்துள்ளது.   ஆனால், இதுவரையில் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் கூட அங்கு நடக்கவில்லை.  நாட்டின்  பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு அங்குல நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை கூட, மோடி தலைமையிலான அரசு அமைதியாக பார்த்துக் கொண்டிருக்காது. இதனை ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. எல்லை அத்துமீறலை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும். நமது வீரர்களின்  ஒருதுளி ரத்தத்தையும் அரசு   வீணாக சிந்த விடாது. துல்லிய தாக்குதல்,  வான்வழி தாக்குதலுக்கு   பிறகு இந்தியா மீதான உலக நாடுகளின் கண்ணோட்டம்  மாறியுள்ளது. இந்தியாவின்   வலிமை உலக அரங்கில் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.  முந்தைய காங்கிரஸ்  ஆட்சியின் போது, நாட்டில் விரிவான தேசப் பாதுகாப்பு  கொள்கை எடுக்கப்படவில்லை. மோசமான  வெளிநாட்டு கொள்கைகளால், திட்டங்களை  தொலைநோக்குடன் பார்ப்பது  பாதிக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் அரசாங்கம்  முடங்கி கிடந்தது.

நமது அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள், உலகம்  முழுவதும் இருந்த ஜனநாயக நடைமுறைகளை நன்றாக ஆய்வு செய்து, நமது நாட்டுக்கு  பல கட்சி ஜனநாயகம்தான் சரியாக இருக்கும் என தேர்வு செய்தனர். இதன் மூலம்,  நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமான
வாய்ப்புகளும், வளங்களும்  கிடைக்கும் என கருதினர். ஆனால், சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளான நிலையில்,  பல கட்சி ஜனநாயகம் தோற்று விட்டதாக மக்களுக்கு தற்போது சந்தேகம்  ஏற்பட்டுள்ளது. பல கட்சி ஜனநாயகத்தால் நமது இலக்கை எட்ட முடியுமா? பல கட்சி  ஜனநாயகத்தால் நாட்டுக்கு பலன் ஏற்படுமா? என அவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த  5 ஆண்டுகளில் நாட்டில்  பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 2013ல்  ஒவ்வொரு நாளும் ஊழல் பற்றிய செய்தி வெளியானது. ஒரே நாளில் ரூ.12 லட்சம்  கோடி அளவுக்கு  ஊழல் நடந்ததும் கூட உண்டு. எல்லையில் பாதுகாப்பற்ற நிலை  நீடித்தது. நமது வீரர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டன. உள்நாட்டு பாதுகாப்பு  குளறுபடியாக இருந்தது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருந்தது. மக்கள்  அன்றாடம் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

ஆனால், தற்போது  பாஜ ஆட்சியில் ரூ.350 லட்சம் கோடி  பொருளாதார வளர்ச்சியை நோக்கி  சென்று  கொண்டிருக்கிறோம். 2024ம் ஆண்டிற்குள்  அதனை எட்டுவோம் என்ற  நம்பிக்கை  உள்ளது. சில அரசுகள் 30 ஆண்டு காலம் ஆட்சி நடத்திய பின்னர் ஒருசில முக்கிய  முடிவுகள் மட்டுமே எடுத்தன. அந்த ஆட்சியில் ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களை  பிரதமராக கருதினர். ஆனால், கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் ஜிஎஸ்டி,  பணமதிப்பிழப்பு நடவடிக்கை, வான்வழி தாக்குதல் உள்ளிட்ட 50 முக்கிய  முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பாஜ.வை போன்று வேறு எந்த  அரசும் இதுவரை  இதுபோன்ற முக்கிய முடிவுகளை விரைவாக எடுத்ததில்லை. வாக்கு வங்கிக்காக மோடி  அரசு எந்த முடிவையும் இதுவரை எடுத்ததில்லை. அவை மக்கள் நலனை  கருத்தில்  கொண்டு  எடுக்கப்பட்டவை. இவ்வாறு அவர் பேசினார். பல கட்சி ஜனநாயகம்  தோற்று விட்டதாக அமித் ஷா பேசி இருப்பதற்கு, நாடு முழுவதும் கடும்  எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாட்டை அதிபர் ஆட்சி முறைக்கு கொண்டு செல்ல  முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

‘தொழில்துறையின் கஷ்டத்தை மத்திய அரசு உணர்ந்துள்ளது’

உள்துறை  அமைச்சர் அமித் ஷா மேலும் பேசுகையில், ``உங்களின் கஷ்டங்கள், அச்சங்கள் புரிகிறது. அவற்றை ஊழலற்ற இந்த அரசு உணருகிறது. எந்தவொரு முக்கிய  முடிவிலும் சிறு பிரச்னைகள் இருக்கதான் செய்யும். ஆனால், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் ஒரே மாதத்தில் 1 லட்சம் கோடி வரி வசூலானது.  தொடக்கத்தில் சிறு கஷ்டங்களை அனுபவித்தாலும் தொழில்துறை சீரமைப்பின்  முடிவில் நல்லதொரு மாற்றம் கொண்டு வரப்படும். அதில் சில திருத்தங்கள்  மேற்கொள்ளப்பட வேண்டும். அரசு தொழில்துறையினருக்கு உதவ முயற்சிக்கிறது.  ஆனால், உலகளவிலும் பொருளாதார மந்தநிலை காணப்படுகிறது. அரசியல் தலைவர்கள்  கொள்கை முடிவுகளை மட்டுமே எடுக்கின்றனர். ஆனால், அரசு உயரதிகாரிகளே அவற்றை  அமல்படுத்துகின்றனர்,’’ என்றார்.

Tags : Opposition parties ,Amit Shah , Opposition parties condemn, new controversy, Amit Shah, saying multi-party, democracy has failed
× RELATED ரஷ்ய அதிபர் தேர்தலில் புடின் மீண்டும்...