கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு வீக்எண்ட் சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்படுமா?..பொது மேலாளர் வருகையால் அதிக எதிர்பார்ப்பு

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி, மதுரை வழியாக சென்னைக்கு வாராந்திர சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ரயில்வே துறையில் தென் மாவட்டங்கள் புறக்கணிப்பு என்பதற்கு மந்த கதியில் நடக்கும் இரு வழிப்பாதை பணிகள், மின் மயமாக்கல் பணிகள் போன்ற பல்வேறு திட்டங்கள் இன்னும்  நிறைவேறாத கனவாகவே இருக்கின்றன. கன்னியாகுமரி - திருவனந்தபுரம், நாகர்கோவில் - திருநெல்வேலி இரட்டை ரயில் பாதை பணிகள் 2020 ல் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்த்த நிலையில், பணிகள் முடிவடைய இன்னும் கூடுதல் வருடங்கள் ஆகும் என்று தெரிகிறது. தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு தான் அதிகளவு ரயில்கள் தேவை ஆகும். இந்த வழித்தடத்தில் சிறப்பு ரயில்களை அவ்வப்போது அறிவித்து ரயில்வே இயக்குகிறது. இவ்வாறு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் பயணிகளால் வரவேற்பை பெற்றுள்ளன. ரயில்வே துறைக்கும் அதிக லாபம் கிடைத்துள்ளது. சிறப்பு ரயில்கள் நிரந்தர ரயிலாக அறிவிக்கப்படுவது என்பது அவ்வளவு எளிதாக நடக்க கூடிய காரியம் இல்லை. ஆனால் கேரளாவில் திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளத்திலிருந்து பல்வேறு ரயில்கள் சிறப்பு ரயில்களாக இயக்கி சில வருடங்களிேலயே பட்ஜெட்டில் நிரந்தர ரயிலாக அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள தென் மாவட்ட பயணிகள் தற்போது குளிர் சாதன பெட்டிகளில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ரயில்வே துறை பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையே பல்வேறு பெயர்களில் அதி வேகமாக பயணிக்கும் வகையில் சொகுசு ரயில்களை இயக்கி வருகிறது. தமிழ்நாட்டில் இயக்கப்படும் இது போன்ற அனைத்து ரயில்களும் சென்னையுடன் நின்று விடுகிறது. இது போன்ற ரயில்கள் தென் தமிழ்நாட்டுக்கு இயக்கப்படுவது கிடையாது.
தென் மாவட்ட பயணிகளை பொறுத்தவரை சென்னைக்கு செல்ல கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதில் கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ஆண்டு முழுவதும் நிரம்பி வழியும். விடுமுறை காலங்களில் முன்பதிவு இல்லாத பெட்டியில் கால் வைக்க கூட இடமில்லாத வகையில் கன்னியாகுமரியில் தொடங்கி சென்னை வரை கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே இது போன்ற பிரச்சினைக்கு தீர்வு காண கன்னியாகுமரி - சென்னை இடையே கூடுதல் ரயில்கள் ( வழி திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம்) இயக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இந்த வழித்தடத்தில் வீக் என்ட் சூப்பர் பாஸ்ட் ரயில்களை முதற்கட்டமாக இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயின், இன்று குமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்கிறார். நாளை (18ம் தேதி) திருவனந்தபுரத்தில் தென் மாவட்ட எம்.பி.க்களுடன் பங்கேற்கும் உயர் மட்டம் ஆலோசனை கூட்டமும் நடக்கிறது. எம்.பி.க்கள் வசந்தகுமார், திரவியம், மாநிலங்களவை எம்.பி. விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். இந்த கூட்டத்தில் தென் மாவட்ட பயணிகளின் வசதிக்காக கூடுதல் ரயில்வே சேவை கிடைக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கிடையே பிரின்ஸ் எம்.எல்.ஏ அனுப்பி உள்ள மனுவில், நாகர்கோவில், கன்னியாகுமரி ரயில்வே வழித்தடத்தை  மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும்.  அதிக வழித்தடங்கள் தமிழக பகுதியில் உள்ளதால், நாகர்கோவில், கன்னியாகுமரி ரயில்வே பகுதிகளை மதுரை கோட்டத்துடன் இணைத்தால் தான் அதிக பயன் கிடைக்கும் என கூறி உள்ளார்.  திருவனந்தபுரம் கோட்டத்துடன் இருப்பதால் டிக்கெட்டுகளில் கூட மலையாளம் தான் அதிகம் இடம் பெற்று இருக்கிறது என கூறி உள்ள அவர், நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு வாராந்திர ரயில் இயக்க வேண்டும். சென்னை - ஐதராபாத் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளார்.

Tags : Chennai ,Kanyakumari , Kanyakumari, Chennai, Weekend Superfast Train, General Manager
× RELATED கன்னியாகுமரி முதல் சென்னை வரை...