×

மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த விவகாரம்: மாநகராட்சி ஆணையருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

சென்னை: சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் மாநகராட்சி ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முகலிவாக்கம், சுபஸ்ரீ நகரை சேர்ந்தவர் செந்தில், இவர் ஷேர் ஆட்டோ ஒட்டி வருகிறார். இவரது மனைவி அனிதா. இவர்களது மகன் தீனா (14). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். தனம் நகரில் உள்ள தெருவில் கடந்த சில தினங்களுக்கு முன் மின்வாரிய அலுவலகம் சார்பில் சாலையில் மின்வயர்கள் பதிக்கும் பணி நடந்தது. ஆனால், அந்த பள்ளங்கள் சரிவர மூடவில்லை என  கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக பெய்த மழையில், மின்வயர்கள் அனைத்தும் வெளியில் தெரியும்படி கிடந்தன.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தீனா, தனது வீட்டின் அருகே உள்ள நண்பனை பார்க்க சென்றான். பின்னர் வீட்டுக்கு புறப்பட்டான். தனம் நகர் வழியாக நடந்து சென்ற போது, சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் கால் வைத்தான். அதில், அதிக அழுத்தம் கொண்ட மின்கம்பி இருந்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதனை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், முகலிவாக்கம் பகுதி மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் செந்தில், உதவி மண்டல பொறியாளர் பாலு ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிறுவன் தீனாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மாங்காடு போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில், சிறுவன் மரணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணை செய்ய வேண்டும் என வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம் முறையீடு செய்திருந்தார். தமிழ்நாடு மின்வாரியத்தின் அலட்சியத்தால் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், மனுவாக தாக்கல் செய்தால் இதனை விசாரிப்பதாக நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி உறுதியளித்தனர். தற்போது, சிறுவன் உயிரிழந்த விவகாரத்தை செய்திகளில் கேட்டறிந்த மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக, மாநகராட்சிக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தோண்டப்பட்ட குழியை முறையாக மூடாத செயல் மனித உரிமை மீறல் ஆகாதா? என கேள்வி எழுப்பியுள்ளது. பணியில் இருந்துகொண்டு அலட்சியமாக செயல்பட்டு வருபவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?, அதேபோல சிறுவனை இழந்த குடும்பத்திற்கு என்ன இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது? என்ற தகவல்களை 4 வார காலத்திற்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் பொழுது, சென்னை மாநகராட்சி ஆணையர் தரப்பிலும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் சார்பிலும் அறிக்கை தாக்கல் செய்ய வாய்ப்புகள் உள்ளன.

Tags : Human Rights Commission ,corporation commissioner , Chennai, Electricity, Child, Victim, Human Rights Commission, Notices, Municipal Commissioner
× RELATED பழக்கடைகளை சேதப்படுத்திய வாணியம்பாடி...