×

சென்னையில் இதுவரை அனுமதியின்றி வைக்கப்பட்ட 7000 பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது; மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி

சென்னை: சென்னையில் இதுவரை அனுமதியின்றி வைக்கப்பட்ட 7000 பேனர்கள் அகற்றபட்டுள்ளதாக  மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை பள்ளிக்கரணையில் அதிமுகவினர் வைத்திருந்த பிளக்ஸ் போர்டு விழுந்து பொறியாளர் சுபஸ்ரீ பலியானதை தொடர்ந்து, உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. முறைகேடாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டது. அரசியல் கட்சி தலைவர்களும், தங்களுக்கு பேனர் வைக்க கூடாது என தொண்டர்களுக்கு அறிவுறுத்தினர்.மாநிலம் முழுவதும் பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பேசிய அவர்; இதுவரை அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. சென்னையில் இதுவரை அனுமதியின்றி வைக்கப்பட்ட 7000 பேனர்கள் அகற்றபட்டுள்ளது.  

வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு, சாலையில் குழி தோண்டி மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மழைக்காலத்தில் சாலையில் குழு தோண்டுவதை தவிர்க்க அனைத்து மண்டலங்களிலும் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படவுள்ளது. வரும் நவம்பர் 15ம் தேதி முதல் குறிப்பிட்ட காலத்துக்கு சாலைகளில் குழி தோண்டுவது தவிர்க்கப்படும் என்றும் அதை ஒருங்கிணைப்பு குழு கண்காணிக்கும். வாக்காளர் விவரங்களை தாங்களாகவே சரிபார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

Tags : Prakash ,Chennai ,Corporation Commissioner , Madras, Banners, Municipal Commissioner
× RELATED ஆவடி அருகே நகைக்கடைக்குள் புகுந்து...