×

சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலியானது தொடர்பாக ஐகோர்ட்டில் முறையீடு: மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்போம்...நீதிபதிகள் உறுதி

சென்னை: சென்னை முகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி 14 வயது சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மின்சாரத்துறையினரின் அலட்சியத்தால் சிறுவன் உயிரிழந்ததாகவும், நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கவும் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் உறுதியளித்துள்ளனர். சென்னை முகலிவாக்கம் பகுதியில் மாநகராட்சி சார்பில் தெரு விளக்குகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக சாலையோரங்களில் பள்ளங்கள் தொடப்பட்டுள்ளன. மேலும், அந்த பணிகள் நிறைவடையாததால், பள்ளத்தை மணல் கொட்டி நிரப்பிவைத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மழை பெய்ததன் காரணமாக பள்ளத்தில் போடப்பட்ட மணல் சரித்து மின்சார கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. அந்த பள்ளங்களில் மழை நீர் தேங்கி காணப்பட்டது. இது தெரியாமல் அந்த வழியாக சென்ற தீனா என்ற மாணவன் தண்ணீரில் கால்வைத்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான். முகலிவாக்கத்தை சேர்ந்த செந்தில், வனிதா தம்பதியின் மகன் தீனா. இவர் எம்.ஜி.ஆர்., நகர் அரசு பள்ளியில் 9 வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை செந்தில் ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆலந்தூர் உதவி பொறியாளர் செந்தில், உதவி மண்டல பொறியாளர் பாலு ஆகியோர் மீது மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், இந்த விவாகரம் தொடர்பாக மாநகராட்சி மற்றும் மின்துறை அலட்சியத்தால் தான் சிறுவன் மரணமடைந்துள்ளான் எனக் கூறி வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்சன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். மேலும் அப்பகுதியில் பணிகளை முழுமையாக முடிக்காமல் அரைகுறையாக குழிகளை மூடி வைத்துள்ளனர் என குற்றம் சாட்டியிருந்தார். நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன்பு முறையீடு செய்தார். அதுமட்டும்மல்லாது, இந்த விவகாரத்தை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால் அதனை மறுத்த நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : court ,Chennai ,death ,boy victim ,Madras High Court ,judges , Chennai, electricity, boy, killed, court, appeal
× RELATED சிதம்பரம் கோவிலில் பொது தீட்சிதர்கள்...