×

விவசாய நிலத்தை அபகரிக்கும் நபர்கள் மீது நடவடிக்கைக்கோரி சுமைதூக்கும் தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

திருவண்ணாமலை: விவசாய நிலத்தை அபகரிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சுமை தூக்கும் தொழிலாளி குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்றதால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். டிஆர்ஓ ரத்தினசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் வின்சென்ட் ராஜசேகர், துணை ஆட்சியர் (பயிற்சி) மந்தாகினி, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் பரிமளா உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், உதவித்தொகை, நலத்திட்ட உதவிகள், கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 348 பேர் மனு அளித்தனர். இந்நிலையில், செங்கம் தாலுகா எறையூர் கிராமத்தைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி பூமிநாதன்(37) என்பவர், அவரது மனைவி நவநீதம், தாய் சுந்தரி, உறவினர் லட்சுமி ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். அலுவலக நுழைவு வாயில் அருகே நின்றிருந்த நான்கு பேரும், திடீரென பாட்டிலில் மறைத்து கொண்டுவந்த மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்த அங்கிருந்த போலீசார் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தினர்.

விசாரணையில், எறையூர் கிராமத்தில் பூமிநாதனுக்கு சொந்தமான 1.22 ஏக்கர் பூர்வீக விவசாய நிலத்தை, சிலர் ஆக்கிரமிப்பதாக தெரிவித்தனர். விளை நிலத்தின் எல்லையை குறிக்கும் கற்களை பிடுங்கிப்போட்டு தகராறு செய்வதாகவும், பலமுறை அதிகாரிகள் மற்றும் போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். தொடர்ந்து, அவர்களை போலீசார் எச்சரித்தனர். பின்னர் இதுகுறித்த கோரிக்கை மனுவை கலெக்டரிடம் அளித்தனர். அதேபோல், சேத்துப்பட்டு தாலுகா பெரிய கொழப்பலூர் கிராமத்தைச் சேர்ந்த கலாவதி என்பவர், குடியிருக்க வீடு இல்லாமல் தவிப்பதாக கலெக்டரிடம் மனு அளித்தார். தன்னுடைய மகன் மற்றும் மகள் ஆகியோர் மாற்றுத்திறனாளிகள் என்பதால், அவர்களை பராமரிக்க வீடு ஒதுக்கித்தர வேண்டும் என கண்ணீருடன் தெரிவித்தார். இது தொடர்பாக விசாரித்த கலெக்டர் கந்தசாமி, உடனடியாக பசுமை வீடு ஒதுக்கீடு செய்யவும், மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்படும் உதவிகளை உடனே வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மக்கள் குறைதீர்வு கூட்டத்தை முன்னிட்டு, கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags : persons ,assault ,land ,Thiruvannamalai , Thiruvannamalai, fire
× RELATED கடலூரில் நடத்துநர் தாக்கப்பட்டத்தை...