×

பல மாதங்களாக இழுத்தடிக்கப்படும் ஆர்.ஓ பிளான்ட் பணி: விரைந்து முடிக்க கிராமத்தினர் கோரிக்கை

சாயல்குடி: கமுதி அருகே காத்தனேந்தலில் கட்டி முடிக்கப்பட்ட ஆர்.ஓ. பிளான்டை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கமுதி ஒன்றியம், காத்தனேந்தல் ஊராட்சியில் காத்தனேந்தல், குடியிருப்பு, பறையங்குளம், குமிலங்குளம் போன்ற கிராமங்கள் உள்ளன. 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. தொடர் வறட்சியால் இப்பகுதியிலுள்ள கிணறு, ஆழ்துளை கிணறு போன்றவை வறண்டு போனதால், அவை பயன்பாடின்றி சேதமடைந்து கிடக்கிறது. காவிரி கூட்டு குடிநீர் முறையாக வராததால், குடிநீர் தொட்டிகள், தெருக்குழாய்கள் சேதமடைந்து கிடக்கிறது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆற்றில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மூலம் கிடைக்கும் தண்ணீரை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் ஏற்றப்பட்டு கிராமங்களுக்கு தண்ணீர் விநியோகம் நடந்து வருகிறது. தெருக்குழாய்கள் உடைந்து தரைமட்டமாக கிடப்பதால் தண்ணீர் சுகாதாரமற்று இருக்கிறது.

இத்தண்ணீர் சற்று சவறு தண்ணீராகவும் இருப்பதால் கிராமமக்கள் குளிப்பதற்கு, துணிகள் சலவை செய்தல் உள்ளிட்ட வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். குடிப்பதற்கு கோவிலாங்குளம் காவிரி குடிநீர் நீரேற்றும் அறையிலிருந்து வாரத்திற்கு இருமுறை வரும் தண்ணீரை பிடித்து சேமித்து குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். காவிரி கூட்டு குடிநீர் போதுமானதாக வராததால் டிராக்டர்களில் விலைக்கு விற்கப்படும் தண்ணீரை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் காத்தனேந்தல் கண்மாய் கரையில் சுமார் ரூ.10லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து உப்புத்தண்ணீரை நன்னீராக்கும் பிளான்ட் அமைக்கப்பட்டது. பணிகள் முழுமையடையாமல் பல மாதங்களாக நடந்து வருகிறது. இந்த பிளான்ட் பணி நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்தால் குடிநீர் பிரச்னை ஓரளவிற்கு தீரும். குடிநீருக்காக, கூலி வேலையின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தண்ணீருக்காக செலவழித்து வருவதாக புகார் கூறுகின்றனர். எனவே ஆர்.ஓ. பிளான்ட் அமைக்கும் பணியை விரைவாக முடித்து கிராமமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காத்தனேந்தல் பஞ்சாயத்து கிராம கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : RO Plant ,completion ,Sayalgudi , Sayalgudi, R.O.
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா