×

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் முடக்கம்: கட்டுமான பணி பாதியில் நின்றது

கோபி: கோபி அருகே உள்ள கொளப்பலூரில் அனைவருக்கும் வீடு திட்ட பயனாளிகளுக்கு ஒன்றரை ஆண்டுகளாக பணம் வழங்காததால் முழுமையாக கட்ட முடியாமல் வீடுகள் பாதியில் நிற்கின்றன. இதனால், இத்திட்ட பயனாளிகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மத்திய அரசின் திட்டமான அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அரசின் சார்பில் வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்படும் பயனாளிகள் தாங்கள் ஏற்கெனவே குடியிருக்கும் வீட்டினை இடித்து விட்டு அரசு வழங்கும் நிதியை கொண்டு புதிய வீடு கட்டி கொள்ளலாம் என உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் அறிவிப்பு செய்யப்படுகிறது. அதன்படி, கோபி அருகே கொளப்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட அருவங்கொரை, செட்டியாம்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதியிலும் சுமார் 200 பயனாளிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வீடு கட்டுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. அனுமதி பெற்றவர்கள் வீட்டிற்கான அஸ்திவாரம் போட்ட பின்னர் முதல் தவணை தொகை வழங்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் கூறியது. இதை நம்பிய பயனாளிகள், அனுமதி கிடைத்தவுடன் தாங்கள் ஏற்கனவே குடியிருந்த பழைய வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடு கட்ட தொடங்கினர்.

அஸ்திவாரம் போட்ட பின்னர் ஒரு சில பயனாளிகளுக்கு மட்டுமே முதல் தவணை தொகை கிடைத்து உள்ளது. அதன் பிறகு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலான நிலையில் இதுவரை இரண்டாவது தவணை தொகை கிடைக்கவில்லை.
இருப்பினும், பணம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையிலும், குடியிருந்த வீட்டை இடித்து விட்டதாலும் வேறு வழியில்லாத பயனாளிகள் பலரிடம் கடன் பெற்று வீடு கட்டும் பணியை தொடர்ந்தனர். ஆனால், ஒரு கட்டத்தில் வீட்டை முழுமையாக கட்டுவதற்கு பணம் இல்லாத நிலையில், வீடு கட்டும் பணியை கைவிட்டனர்.இதைத்தொடர்ந்து பயனாளிகள் கொளப்பலூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று தங்களுக்கு வரவேண்டிய தவணைதொகை குறித்து கேட்டுள்ளனர்.
அதற்கு பேரூராட்சி அலுவலர்கள் இதுவரை அரசிடம் இருந்து நிதி வழங்கப்படவில்லை என்றும், நிதி வந்தால் தானே தர முடியும் என்றும் அலட்சியமாக கூறி உள்ளனர்.இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளனர். ஆனால், அங்கும் சரியான பதில் கிடைக்கவில்லை. இதனால், கொளப்பலூர் பகுதியை சேர்ந்த பயனாளிகள் கடுமையான மன உளைச்சல் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பயனாளிகள் கூறுகையில், இங்குள்ளவர்கள் அனைவருமே கூலி வேலைக்கு சென்று வரும் நிலையில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி வருவதால், தற்போது வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் தவித்து வருகிறோம்.
இதுவரை அரசிடம் இருந்து ஒரு தவணை தொகை கூட கிடைக்காததால் வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். அதனால் அரசு உடனடியாக எங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்க வேண்டும். இல்லையெனில் அத்தனை பயனாளிகளையும் திரட்டி சாலை மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Tags : Home for everyone
× RELATED சென்னை அடுத்த பள்ளிக்கரணையில் அதிமுக...