×

மதுரையில் பரிதாபம்: குப்பைத் தொட்டியில் விட்டு சென்ற பச்சிளம்குழந்தை மீட்பு

மதுரை: மதுரையில் குப்பைத்தொட்டியில் விட்டு சென்ற, பிறந்து ஓரிரு மணிநேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. மதுரை ஜெய்ஹிந்த்புரம், ஓம்சக்தி நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையை ஒட்டிய குப்பைத்தொட்டியில் நேற்று அதிகாலை 4 மணிக்கு ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, பிறந்து சில மணிநேரமே ஆன ஆண் குழந்தை அழுதபடி, மழைச்சகதி, துர்நாற்றத்திற்கு இடையில் கிடந்தது. எறும்புகளும் மொய்த்திருந்தன. இப்பகுதியினர் உடனே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். குழந்தை மீட்கப்பட்டு, முதலுதவி சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட குழந்தைக்கு, டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். குழந்தையை குப்பைத்தொட்டியில் விட்டுச் சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தை கள்ளத்தொடர்பில் பிறந்ததா அல்லது வேறு காரணமா என்பது குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். டாக்டர் ஒருவர் கூறும்போது, மதுரை அரசு மருத்துவமனையின் மேம்படுத்தப்பட்ட மகப்பேறு மருத்துவப்பிரிவில் உள்ள 24 மணிநேர சிசு நல தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை வழங்கி வருகிறோம். குழந்தையின் உடல் நலம் தேறி வருகிறது. ஓரிரு தினங்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு, போலீசாருக்கு தகவல் தரப்பட்டு, தொட்டில் குழந்தை திட்டத்தில் குழந்தை ஒப்படைக்கப்படும் என்றார்.

Tags : Madurai ,Recovery ,baby girl ,trash bin , Madurai, child, rescue
× RELATED கடன் தொல்லையால் தாய், 2 மகள்கள் தூக்கிட்டு தற்கொலை: மதுரையில் பரிதாபம்