×

பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு வேனில் கொண்டு சென்ற சாமி சிலைகள் பறிமுதல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு வேனில் கொண்டுசென்ற சிலைகளை போலீசார் பறிமுதல் செய்து, அவைகள் கடத்தல் சிலைகளா என விசாரிக்கின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த, கோபாலபுரம் சோதனைசாவடியருகே நேற்று, தாலுகா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். வேனில், வைக்கோல்களிடையே 6 அடி உயரமுள்ள நடராஜர் சிலை, துவாரபாலகி சிலைகள் 6 அடியில் இரண்டு, என மொத்தம் 3 சிலைகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

சிலைகள் அனைத்தும் ஐம்பொன்னாக இருக்குமோ என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. கும்பகோணத்தை சேர்ந்த டிரைவர் ராகுல்(26) என்பவரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர், கும்பகோணத்திலிருந்து பித்தளை சிலைகளை எடுத்துகொண்டு, கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஒரு கடைக்கு விற்பனைக்காக கொண்டு செல்வதாக தெரிவித்தார். மேலும், சிலைகளை வாங்கி கொண்டுவந்ததற்கான ரசீதையும் காண்பித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், சிலைகளை பறிமுதல் செய்து, தாலுகா ஸ்டேஷனுக்கு கொண்டுவந்தனர். உண்மை தன்மை கண்டறிய, போலீசார் பொள்ளாச்சி இந்து அறநிலையத்துறை ஆய்வாளரிடம் சிலைகளை ஒப்படைத்தனர். ஆய்வுக்கு பிறகே, இந்த சிலைகள் ஐம்பொன்னாலான கடத்தல் சிலைகளா அல்லது பித்தளை சிலைகளா என தெரியவரும் என்றும், போலீசார் தெரிவித்தனர்.

Tags : Pollachi Pollachi , Pollachi, statues, confiscation
× RELATED பொள்ளாச்சியில் மணமகனுக்கு கொரோனா...