×

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு பலத்த மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி...!

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெப்ப சலனம் ஏற்பட்டு வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகி கடலோரத்தில் நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது. விருதுநகர், பெரம்பலூர், நாமக்கல், கொடைக்கானல், சேலம், கும்பகோணம், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

வானிலை மையம்

முன்னதாக தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், நாகை, காஞ்சிபுரம், வேலூர் , தஞ்சை உள்ளிட்ட  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கின்றது. கடந்த  24மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 8 செ.மீ. மழையும், தஞ்சை மாவட்டத்தில் 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவில் இடியுடன் கூடிய மழைபெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றது. அத்துடன் சுழல்காற்று வீசும் என்பதால் குமரிக் கடல், மாலத்தீவு, இந்திய பெருங்கடல் பகுதிகளில் மீனவர்கள் 2 நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்த படுகிறார்கள் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

சென்னை

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதிகாலையில் லேசான மழை பெய்தது. நள்ளிரவில் குளிர்ந்த காற்று வீசிய நிலையில் அதிகாலையில் பெய்த மழையால் இதமான சூழல் நிலவியது. மெரினா கடற்கரை, திருவல்லிக்கேணி, சாந்தோம், பட்டினம்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரம், சேப்பாக்கம், எழும்பூர், பட்டினப்பாக்கம், அடையாறு, மந்தவெளி உள்ளிட்ட இடங்களில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த பலத்த மழை பெய்தது. நேற்று மாலை வானம் கருமேகத்துடன் காணப்பட்டது. பின்னர், இடி மின்னலுடன் இரவில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மேலும், மின்தடை ஏற்பட்டு இருள் சூழ்ந்ததால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இம்மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று இரவு மழை பெய்தது. சிறுவாச்சூர், வாலிகண்டபுரம், திருமாந்துறை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை கனமழை கொட்டித் தீர்த்தது. மாணவ-மாணவிகளும், வேலை முடிந்து திரும்பியவர்களும் மழையில் நனைந்தவாறே சென்றனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மாலை சுமார் 6 மணிக்கு தொடங்கிய மழை 7.30 மணி வரை பலத்த மழை பெய்தது. அதனை தொடர்ந்து சாரல் மழை நீடித்தது. 3-வது நாளாக தொடரும் மழையால் விவசாய வயல்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

கொடைக்கானல்

கொடைக்கானலில் தொடர் மழை காரணமாக பீன்ஸ் உள்ளிட்ட விவசாயப் பயிர்கள் நன்கு விளைச்சல் அடைந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் மலைக் காய்கறிகள் நன்கு விளைந்து வருகின்றன. இவற்றை பூச்சி தாக்காதவாறு விவசாயிகள் தங்களது நிலங்களில் மருந்து தெளிப்பது, உரமிடுவது, களையெடுத்தல், விவசாய நிலங்களை தயார்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு களப்பணிகளை செய்து வருகின்றனர். இதனிடையே நேற்று இரவு கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

சேலம்

சேலத்தில் 2 மணி நேரம் வரை வெளுத்து வாங்கிய மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. அங்குள்ள பழைய சூரமங்கலம் புதுரோடு, இரும்பாலை ஐந்து ரோடு, சின்ன கடை வீதி,  அஸ்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கும்பகோணம்

கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்ததால் சம்பா மற்றும் தாளடி நெற் பயிரிடும் விவசாயிகள் மட்டுமின்றி காய்கறி பயிரிடும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கும்பகோணத்தில் நான்கு மணிநேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய மழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக அங்குள்ள அசூர்,  மருதாநல்லூர், வலங்கைமான், திருநாகேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் 4 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக அங்கு வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது. சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்  மகிழ்ச்சியடைந்தனர்.

நாகப்பட்டினம்

நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. திட்டச்சேரி, சிக்கல், கீழ்வேளூர்,வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இந்த மழை சம்பா சாகுபடிக்கு ஏதுவாக இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

கும்பகோணம்

கும்பகோணத்தில் நான்கு மணிநேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய மழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக அங்குள்ள அசூர்,  மருதாநல்லூர்,வலங்கைமான், திருநாகேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் 4 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. திருவாரூர் மாவட்டத்தில் கமலாபுரம், கொரடாச்சேரி, பூந்தோட்டம் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் நேரடி சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, கும்பகோணம் ஆகிய பகுதியில் காற்றுடன் கனமழை பெய்தது.

Tags : districts ,Tamil Nadu , Tamil Nadu, heavy rain, public, farmers, happiness
× RELATED கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை